சர்வதேச பயங்கரவாதியாக திகழ்ந்தவர் பின்லேடன். இவர் அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவராக இருந்தார். இவர் உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தார்.
பாகிஸ்தானின் அயோதாபாத்தில் பதுங்கி இருந்த அவரை கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்க அதிரடிப்படை சுட்டுக்கொன்றது. அதை தொடர்ந்து அய்மான் அல்-ஜவாகிரி அல்- கொய்தா தலைவராக பொறுப்பேற்றார்.
சுட்டுக்கொல்லப்பட்ட பின்லேடனுக்கு 4 மனைவிகள் உள்ளனர். அதே போன்று பல மகன்கள் இருக்கின்றனர். அவர்களில் ஹம்சாவும் ஒருவர் தற்போது இவருக்கு 20 வயதாகிறது.
ஹம்சா அபோதாபாத்தில் தனது தந்தை பின்லேடன், தாயார் ஹைரியா சபருடன் தங்கியிருந்தார் ஆனால் பின்லேடன் கொல்லப்பட்ட போது அங்கு அவர் இல்லை. தலைமறைவாகி தப்பிவிட்டார்.
இவர் பின்லேடனுக்கு பிடித்தமான மகன் ஆவார். அவருக்கு பிறகு ஹம்சா தான் அல்கொய்தா இயக்க தலைவர் என கூறி வந்தனர். அதே போன்று பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு அமெரிக்காவிற்க்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் எதிராக ஹம்சா குரல் கொடுத்தார்.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் தலைநகரங்களில் தாக்குதல் நடத்தும்படி அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு உத்தரவிட்டார். கடந்த 2015-ம் ஆண்டில் அவரது தகவல் அடங்கிய ஆடியோ வெளியிடப்பட்டது.
அதில் காபூல், பாக்தாத் மற்றும் காஷாவில் அல்கொய்தா தீவிரவாதிகள் புனித போர் நடத்தி வருவதாக கூறியிருந்தார் வாஷிங்டன், லண்டன், பாரீஸ், டெல் அவில் உள்ளிட்ட நகரங்களிலும் அது நடைபெறுவதாகவும், தாக்குதல் தொடரும் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்கா சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலை வெளியிட்டது. அதில் ஹம்சா பெயரும் இடம் பெற்றுள்ளது.
எனவே அவருக்கு அமெரிக்க கம்பெனிகளில் அவருடன் கூடிய வர்த்தகங்கள் தடை செய்யப்பட்டன. மேலும் அங்குள்ள அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன