சாகடிக்கப்படும் தமிழினம்…! காப்பாற்றப் போவது யார்…?

உலகின் ஆதி மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியும், அந்த மொழியினை பேசக்கூடிய தமிழர்களும் இன்று உலகில் ஒடுக்கப்பட்ட ஒரு இனமாகவே இருந்து வருகின்றனர்.

தமிழன் இல்லாத நாடில்லை, தமிழர்களுக்கு என்று ஒரு தனி நாடில்லை என்ற கருத்தும், நிலையும் மிக நீண்டகாலமாகவே நீடித்துகொண்டுதான் இருக்கின்றது.

இந்த நிலையை போக்க வேண்டும் என்பதற்காகவே, “தமிழீழம்” என்ற கோட்பாடுடன் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இருந்து இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் வெடித்தது.

சுதந்திர இலங்கைக்கு முற்பட்ட காலத்திலும் சரி, சுதந்திர இலங்கைக்கு பிற்பட்ட காலத்திலும் சரி தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்களால் அடக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டுமே வந்தார்கள்.

இதுவே, பிற்பட்ட காலத்தில் பெரும் ஆயுதப் போராட்டம் ஒன்று ஏற்பட காரணமாயிற்று. சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் நீடித்த இந்த ஆயுதப் போராட்டம் 2009ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த ஆயுதப் போராட்ட காலத்தில் எத்தனை உயிர்கள் இழக்கப்பட்டன..? எவ்வளவு உடைமைகள் அழிக்கப்பட்டன..? எத்தனை குழந்தைகள் அநாதையாக்கப்பட்டார்கள் என்றால் அதற்கு ஒரு சரியான பதில் கிடைக்குமா என்பதே சந்தேகம்.

தன்னுடைய இனமும், தன்னுடைய அடுத்த சந்ததியினரும் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே, இத்தனை இழப்புகளும், இத்தனை கொடுமைகளும் அரங்கேறியிருந்தன.

ஆனால், அந்த நோக்கம் இன்று நிறைவேறியுள்ளதா என்றால், அதற்கான பதில் கேள்விக்குறியாகவே இருக்கின்றது. அல்லது அந்த இலக்கை நோக்கிய நகர்வுகளாவது இன்று இடம்பெறுகின்றதா என்றாலும் அதுவும் கேள்விக்குறியே.

ஏனெனில், இன்று இலங்கையில் இடம்பெறும் அரசியல் காய் நகர்த்தல்களும், தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகளும், தமிழ் அரசியல் தலைமைகளின் மௌனமும் அவ்வாறு சிந்திக்க செய்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி மீது வெறுப்பு கொண்டிருந்த தமிழ் மக்கள், 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளராக போட்டியிட்ட சமகால மைத்திரிபால சிறிசேனவை வெற்றி பெற செய்திருந்தனர்.

தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வெற்றிபெறச் செய்தனர். அது போலவே 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தார்.

எனினும், அந்த வாக்குறுதிகளில் இருந்து இன்று பின்வாங்கும் நிலையில் ஜனாதிபதியின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. இது இவ்வாறிருக்க 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பொது தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளை தற்போது இருக்கும் தேசிய அரசாங்கம் வழங்கியிருந்தது.

எனினும், தனது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் அந்த வாக்குறுதிகளில் இருந்து நல்லாட்சி அரசாங்கமும் விலகி செல்கின்றது என்றால் மிகையாகாது.

2015ஆம் ஆண்டில் அமெரிக்காவினால், இலங்கையின் இணை அனுசரனையுடன் சர்வதே மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானத்தில் இருந்து பின்வாங்கும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரியின் நிலைப்பாடு மாறியுள்ளது.

குறித்த பிரேரணையை தளர்த்துமாறு அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பிடம் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஏற்படுத்தப்பட்ட நல்லிணக்க செயலணி, வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாகங்களிலும் இருந்து மக்களின் கருத்துகளை பெற்றுக்கொண்டது.

இது தொடர்பிலான அறிக்கை கடந்த செவ்வாய்க் கிழமை நல்லிணக்க செயலணியில் தலைவர் சந்திரிகா குமாரதுங்கவிடம் கையளிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த குற்ற விசாரணைக்கு கலப்பு நீதிமன்றம் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

எனினும், கலப்பு நீதிமன்ற முறைக்கு இலங்கை அரசாங்கம் முற்றிலுமாக மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், புதிய அரசியல் அமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என நல்லாட்சி அரசாங்கத்தில் வாக்குறுதி வழங்கப்பட்டிருந்த அதுவும் இன்று கேள்விக்குறியாகியுள்ளது.

மேலும், வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர், அரசியல் கைதிகளின் விடுதலை, காணிகள் விடுவிக்கப்படாமை, வறுமை, தொழில் வாய்ப்பு என ஏராளமான விடயங்களில் ஏமாற்றம்.

இப்படி அரசியல் ரீதியாக தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், இனவாதம் எனும் மனித வெடிகுண்டுகள் தமிழர்களை இலக்கு வைத்து வெடிக்கசெய்யப்படுகின்றது.

குறிப்பாக 2016ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் இடம்பெற்ற சில கசப்பான சம்பவங்கள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைகின்றது. சில பௌத்த தேரர்களும், பொதுபல சேனா போன்ற அமைப்புகளும் இனவாதத்தை வெளிப்படையாக கக்கத்தொடங்கியுள்ளனர்.

அண்மையில் கிழக்கு மாகாணத்தில் பௌத்த தேரர்கள் நடந்துகொண்ட விதமும், மட்டக்களப்பு நகரை பொதுபலசேனா அமைப்புடன் இணைந்து தேரர்கள் முற்றுகையிட முற்பட்டமையும் சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றது.

இவற்றோடு, தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழர்களின் வரலாற்று சின்னங்கள் அழிக்கப்பட்டு, திட்டமிட்ட அடிப்படையில் சிங்கள குடியேற்றங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இப்படி அரசியலுக்கு அப்பாலும் தமிழர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுகின்றது. ஒரு உதைப்பந்தை போல தமிழர்கள் அங்கும் இங்குமாக தாக்கப்படுவது இன்று தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

எனினும், இலங்கை அரசியலில் இன்று ஸ்தீரமான நிலையில் இருக்கும் தமிழ் அரசியல் தலைமைகள் இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டு, மௌனமாக இருப்பதே தமிழர்கள் மத்தியில் பாரிய அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் வெளிப்பாடாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனின் உருவப்படம் அண்மையில் எரிக்கப்பட்டது. தமிழர்களே இன்று தமிழ் தலைமைகளுக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளியிட தொடங்கியுள்ளனர்.

இப்படி ஏமாற்றம், போலித் தன்மை, பொய் என ஏராளமான விடயங்கள் கலந்த அரசியலாக இலங்கை அரசியல் மாறிப்போயுள்ள நிலையில், அதில் தமிழர்கள் மூழ்கடிக்கப்பட்டு சாகடிப்படுகின்றார்கள்.

இவர்களை யார் காப்பாற்ற போகின்றார்கள்..? கடவுள் போல ஒருவன் இருந்து தமிழர்களையும், தமிழர்களின் கௌரவத்தையும் காப்பற்றி வந்த நிலையில், அவன் காணாமல் செய்யப்பட்டுள்ளான்.

இனி அந்த கடவுளே வந்தால் மட்டுமே தமிழர்களை காப்பாற்ற முடியும் என தந்தை செல்வா குறிப்பட்டமையே இங்கு ஞாபகம் வருகின்றது.