நல்லாட்சி அரசின் பயணம் சரியான திசையில் செல்கின்றதா?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 2015 ஜனவரி 8ல் நடந்த ஜனநாயக புரட்சியின் மூலம் நல்லாட்சி மலர்ந்தது. நாளை ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியடைகிறது.

சர்வாதிகாரத்தின் பக்கம் போய்க்கொண்டிருந்த அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மக்கள் முற்று முழுதாக நிராகரித்து ஜனநாயத்தைக் காப்பாற்றும் பொருட்டு இன, மத மொழி பேதங்களைக் கடந்து ஓரணியில் திரண்டு மைத்திரிபால சிறிசேனவை தேர்ந்தெடுத்தனர்.

இந்தத் தெரிவு மிகப் பெரிய எதிர்பார்ப்புக்களைக் கொண்ட தெரிவாகவே பார்க்கப்பட்டது.இரண்டு வருடங்களுக்குப் பின்னர் அடுத்த நகர்வுக்குச் செல்வதற்கு முன்னர் சிறிதளவேனும் கடந்த காலச் செயற்பாடுகள் குறித்து மீள்வாசிப் பொன்று செய்யப்படுவது அவசியமானதொன்றாகும்.

ஏனெனில் அண்மைக்காலச் செயற்பாடுகள் குறித்து நாட்டு மக்கள் சின்னதொரு அதிருப்தியை வெளிக்காட்டியிருப்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டியதொன்றாகும்.

ஆங்காங்கே சிற்சில சம்பவங்கள் காரணமாக அரசு இயந்திரத்திலும் கோளாறுகள் காணப்படுவதை காணமுடிகிறது.

மிகப் பெரிய அரசியல் புரட்சியாகப் பார்க்கப்பட்ட நல்லாட்சி அரசு அதன் பயணப் பாதையை சரியான திசையில் அமைத்துக்கொண்டிருக்கின்றதா? என்ற கேள்வியொன்று எழவே செய்கின்றது.

என்றாலும் நாட்டை ஆட்சி புரிவது தனியொரு கட்சியல்ல என்பதை நாம் முதலில் கவனத்தில்கொள்ள வேண்டும்.

எதிரும் புதிருமாக இருந்த இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து நாட்டின் அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக ஒன்றிணைத்து தேசிய அரசை உருவாக்கிக்கொண்டுள்ளது.

இதுவொன்றே போதும் ஜனநாயக நீரோட்டத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகக் கொள்வதற்கு.

இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்துச் சமூகளதும் மக்கள் அன்று மகிந்த ஆட்சியை முற்றாக எதிர்த்திருந்த நிலையில் அவரால் முன்கூட்டியே தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதனை எதிரணிகளும், சிவில் சமுகங்களும் ஏன் மகிந்தவுடனிருந்த பலரும் கூட பயன்படுத்தி அவருக்கெதிராக வெளியே வந்து 2015 ஜனவரி 8ல் தமது தீர்ப்பை சரியானமுறையில் வழங்கினர்.

மைத்திரிபால சிறிசேனவுக்கும், நல்லாட்சிக்கும் மக்கள் வழங்கிய தீர்ப்பு நாட்டில் ஜனநாயகத்தை மலரச் செய்ய வேண்டுமென்பதே ஆகும்.

பொருளாதார ரீதியில் படுபாதாளத்துக்குள் தள்ளப்பட்ட நாட்டை அதிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய கட்டாயக் கடப்பாட்டுக்குள் அரசு தள்ளப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தை மேம்படச் செய்ய வேண்டுமானால் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தாக வேண்டும்.

அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க உள்ளக மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் முதலீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான முனைப்புகள் மிக முக்கியமானதாகும்.

கடந்த இரண்டு வருட காலத்தில் அரசு முன்னெடுத்த பணிகள் முதலீடுகளை உள்வாங்கும் பொருட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதாகும்.

முதலீட்டாளர்கள் வரவேண்டுமானால் நாட்டில் அமைதிச் சூழல் ஏற்பட்டிருப்பதை அவர்களுக்குக் காட்டவேண்டும். இதுவொரு சவால்மிக்கதான பணியாகும்.

ஏனெனில் பல்லின மக்கள் வாழும் நாட்டில் கடந்த காலத்தில் உருவாக்கப்பட்ட இன மோதல்கள், கசப்புணர்வுகள் முற்றுமுழுதாக நீங்கிவிட்டதாக எவராலும் உறுதியாகக் கூற முடியாது.

அந்தத் தீய சக்திகள் இன்றளவும் தமது செயற்பாடுகளை ஏதோவொரு வகையில் முன்னெடுத்தவண்ணமே உள்ளனர். அவற்றைத் தடுத்து முறியடித்தால் மட்டுமே பாதையை சீர்செய்து கொள்ள முடியும்.

அந்தச் சவாலை எதிர்கொள்வதில் அரசு படிப்படியாக முன்னேற்றம் கண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

இத்தகைய சூழ்நிலையில் இரண்டாவது ஆண்டை நிறைவு செய்துள்ள நல்லாட்சி அரசு மூன்றாவது ஆண்டை நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கின்றது.

மூன்றாவது ஆண்டை முக்கியமானதொரு காலகட்டமாகவே பார்க்க வேண்டியுள்ளது.

ஏனெனில் அரசு முன்வைத்துள்ள பொருளாதார அபிவிருத்தி புதிய அரசியலமைப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்களை நிறைவு செய்ய வேண்டியுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வகுத்திருக்கும் திட்டம் தூரநோக்குடன் கூடியதாகும்.

அதேபோன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நாட்டின் அபிவிருத்தி, பொருளாதார முன்னேற்றம் தொடர்பிலும், இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது குறித்தும் கவனம் செலுத்தி வருகின்றார்.

இந்த வருடத்துடன் நல்லாட்சியை கவிழ்க்க சிலர் கனவு கண்டு வருவதாக சுட்டிக்காட்டியிருக்கும் ஜனாதிபதி 2020 வரை எந்தச் சக்தியாலும் ஆட்சியை அசைக்க முடியாதென உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.

மக்களால் தூக்கி வீசப்பட்ட சிலர் நாட்டு மக்களை திசை திருப்பவும் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர். அவை வெறும் நாடகமாக இருந்துவிடும்.

யதார்த்த நிலைக்கு அவர்களால் முகம் கொடுக்க முடியாது. விகாரைகளில் ஒன்றைப் பேசும் மகிந்த முஸ்லிம்களிடம் மற்றொன்றைப் பேசுகிறார். மிகப் பெரிய ஏமாற்றுப் பேர்வழியாகக் காணப்படுகிறார்.

இவரது பார்வையில் அரசின் பயணம் குறுகியதாகக் காணப்படலாம். ஆனால் அரசின் திட்டங்கள் யதார்த்த பூர்வமானவையாகும்.

அதேசமயம் இனங்களை மோதவிட்டு அதன் மூலம் அரசியல் இலாபம் தேட முயற்சிக்கும் சக்திகள் அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் செயற்பாடுகளை மறைமுகமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இவற்றை அடையாளம் கண்டு முறியடிக்க அரசு பின்னிற்கக் கூடாது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவேண்டும். அரசு அதனை உரிய முறையில் செய்யும் என எதிர்பார்க்கலாம்.

இந்தப் பயணத்தில் தடைக்கற்கள் வருவது தவிர்க்க முடியாது ஏனெனில் இது ஜனநாயக வழிப்பாதை தடைகளை அதே வழியை பின்பற்றி அகற்றிக்கொள்ள வேண்டும்.

சட்டம், ஒழுங்கு மீறப்படாமல் அதனைச் செய்ய வேண்டியுள்ளது. நிச்சயமாக வெற்றி இலக்கை நோக்கி நல்லாட்சி அரசு பயணிக்கும் என நம்பலாம்.

அடுத்த வரும் மாதங்கள் மிக முக்கியமானவையாக அமையலாம்.சில சந்தர்ப்பங்களில் அரசு கடும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டி வந்தாலும் தவிர்க்க முடியாது போகும்.

கடந்தகால ஊழல் மோசடிகள், அரச விரோதச் செயற்பாடுகள் தொடர்பில் இறுதிக் கட்ட நடவடிக்கைகளுக்கான காலம் அண்மித்திருப்பதை காணமுடிகிறது.

அதே சமயம் நாட்டில் நீதி நிலைநாட்டப்படுமெனவும் மக்களின் எதிர்பார்ப்புகள் படிப்படியாகி நிறைவேற்றப்படும். முழுமையாக நிறைவேறும் என்பதை ஜனாதிபதியும், பிரதமரும் உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

அரசு நெடுந்தூரம் பயணிக்கவேண்டியுள்ளது. இடையிடையே பல்வேறு முட்டுக்கட்டைகள் வரலாம்.

அவற்றைக் கடந்து செல்லவேண்டிய கட்டாயத்துக்குள் அரசாங்கம் இருப்பதை ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது.

முரண்பாடுகளில் உடன்பாடு காணமுடியும் என்பதை நல்லாட்சி அரசு உறுதி செய்துள்ளது.

சவால்களை எதிர்கொண்டு மூன்றாவது வருட வெற்றிப்பாதையில் பிரவேசிக்கும் நல்லாட்சி அதன் இலக்கு நோக்கிய பயணத்தில் முன்னேறிச் செல்ல வாழ்த்துகின்றோம்.