மத்தல விமான நிலையத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! மகிழ்ச்சியில் மஹிந்த!!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை புனரமைப்பு நடவடிக்கை இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது.

போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்கவின் தலைமைத்துவத்தில் இன்று காலை 8.30 மணியளவில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அங்கு புனரமைப்பு நடவடிக்கை சீன நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுவதன் காரணமாக காலை 8.30 முதல் மாலை 4.30 மணி வரை விமான பயண நடவடிக்கை மத்தல விமான நிலையத்தின் ஊடாகவே மேற்கொள்ளப்படுகின்றது.

அதற்கமைய இன்றைய தினம் மத்தல விமான நிலையத்தில் பயணிகள் அதிகளவில் நிறைந்து காணப்பட்டதாகவும், அதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவும் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் மத்தல விமான நிலையம் பல்வேறு சர்ச்சைகளுக்கு முகங்கொடுத்தது. பாரிய நிதி செலவீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மத்தல விமான நிலையம், பாரிய நட்டத்தை எதிர்நோக்கியிருந்தது.

விமான நிலையம் அமைந்துள்ள அமைவிடம் குறித்து விமான சேவைகள் நிறுவனங்கள் அதிருப்தி அடைந்திருந்தன. இதன் காரணமாக தமது விமான சேவைகளை மத்தல விமான நிலையம் ஊடாக முன்னெடுக்க மறுத்திருந்தன.

இந்நிலையில் இன்றையதினம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இணையாக மத்தல விமான நிலையம் பரபரப்பாக காணப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மகிழ்ச்சி அடைந்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்த சிந்தனை செயல் திட்டத்தின் கீழ் ஆசியாவின் ஆச்சரியமாக மத்தல விமான நிலையம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.