புலிகளைப் போன்று படையினருக்கும் புனர்வாழ்வு அளிக்க வேண்டும்! செயலணி பரிந்துரை!!

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டதனைப் போன்றே அரசாங்கப் படையினருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டுமென நல்லிணக்க பொறிமுறைமை குறித்த ஆலோசனை செயலணி (CTF) பரிந்துரை செய்துள்ளது.

அரசாங்கத்திடம் அண்மையில் வழங்கிய அறிக்கையில் இந்தப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு படைப் பிரிவாக வடக்கிலிருந்து கிரமமான அடிப்படையில் அகற்றிக்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னர் படைப் பிரிவினரை புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறு எவ்வித யோசனைகளும் முன்வைக்கப்படவில்லை.

இந்த புனர்வாழ்வு அளிக்கும் யோசனை ஒட்டுமொத்த படையினரையே இழிவுபடுத்தும் செயற்பாடு என சிரேஸ்ட படை அதிகாரியொருவர் கூறியுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொடூரமான குற்றச் செயல்களில் ஈடுபட்ட புலிப் பயங்கரவாதிகளுடன் தம்மையும் நிகர்ப்படுத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

பாதுகாப்புப் படைகளை மீளமைக்க வேண்டுமெனவும் செயலணி பரிந்துரை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.