மத்திய அரசு மேற்கொண்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கையை மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடுமையாக எதிர்த்து வருகிறார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியை அனுப்பிவிட்டு அத்வானி, ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி போன்ற யாராவது ஒருவர் தலைமையில் தேசிய அரசு அமைக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி இன்று வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி குறித்து மம்தா பானர்ஜி அப்படி கருத்து சொல்லி இருக்கக் கூடாது என்று மத்திய உள்துறை இணை மந்திரி கிரென் ரெஜிஜூ தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரெஜிஜூ, “பிரதமர் மோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பிரதமரை பதவியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை கூறி இருக்கக் கூடாது. இதனை சீரியஸாக எடுத்துக் கொள்ள கூடாது” என்று கூறினார்.
முன்னதாக இன்று செய்தியாளர்களிடம் மம்தா கூறியதாவது:-
பிரதமர் மோடி காளிதாஸ் போல நடந்து கொள்கிறார். அதாவது அவர் உட்கார்ந்து இருக்கும் மரக்கிளையையே வெட்ட முயற்சிக்கிறார். இப்போதுள்ள சூழ்நிலையில் வேறொரு பா.ஜனதா தலைவர் தலைமையில் தேசிய அரசு அமைக்கப்பட வேண்டும். பிரதமர் மோடிக்கு விடை கொடுத்து அனுப்புங்கள்.
அத்வானி, ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி போன்ற யாராவது ஒருவர் தலைமை தாங்கட்டும். இப்போதுள்ள சூழ்நிலை ஏற்றுக்கொள்ள முடியாதது. மத்தியில் ஜனாதிபதி ஆட்சி அமைவதற்கான சரியான நேரம் இது தான். குழப்பத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று ஜனாதிபதிக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.