கனடா நாட்டை சேர்ந்தவர் பிலிப் (வயது 54). இவர் பல்வேறு நாடுகளில் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அதே நாட்டை சேர்ந்த பாராஹா (47) என்ற பெண்ணும் சுற்றுலா சென்றுள்ளார். 15 ஆண்டுகளாக நண்பர்களாக பழகிய இவர்களிடையே காதல் மலர்ந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் சுற்றுலா மேற்கொண்ட இவர்களுக்கு தமிழ்கலாசாரம் பிடித்து போயிற்று. இங்குள்ள திருமண சடங்குகள் இவர்களை ஈர்த்தது.
இதனையடுத்து தமிழ்கலாசார முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்த இவர்கள் தங்கள் நாட்டுக்கு கடந்த ஜனவரி மாதம் சென்றனர். அங்கு அவர்களது நாட்டு முறைப்படி நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். பின்னர் இந்தியா வந்த இவர்கள் திருவண்ணாமலையை வந்தடைந்தனர். இங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கிய இவர்கள் ஜனவரி 6-ந் தேதி தமிழ்கலாசார முறைப்படி திருமணம் செய்யப்போவதாக முன்பதிவு செய்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து தமிழ்முறைப்படி திருமண அழைப்பிதழையும் அச்சடித்து உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கினர்.
இந்த நிலையில் முன்பதிவு செய்து கொண்டபடி 6-ந் தேதியான நேற்று (வெள்ளிக்கிழமை) இவர்களது திருமணம் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. மணமகள் பாராஹா பட்டுப்புடவை அணிந்திருந்தார். மணமகன் பிலிப் வேட்டி-சட்டை அணிந்திருந்தார். வேத மந்திரங்கள் ஓத தமிழ்முறைப்படி பாராஹாவின் கழுத்தில் பிலிப் தாலி கட்டினார். மாலை மாற்றிக்கொண்ட அவர்கள் அக்னி வலம் வந்தனர்.
அதனை தொடர்ந்து பாராஹாவிற்கு, பிலிப் மெட்டி அணிவித்தார். திருமணத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினர். அனைவருக்கும் அறுசுவையுடன் திருமண விருந்து வழங்கப்பட்டது.
திருமண வாழ்க்கை குறித்து பாராஹா கூறியதாவது,
நான் தமிழகத்திற்கு சுற்றுலா வந்த போது தமிழக மக்களின் கலாசாரத்தால் நெகிழ்ந்து போனேன். இங்கு நடந்த திருமணம் என்னை ஆச்சரியப்பட வைத்தது. சுற்றலா சென்றதால் உரிய திருமண வயதை நாங்கள் கடந்து விட்டோம். எனினும் இருக்கிற காலத்திலாவது தம்பதியாக வாழ்வோம் என முடிவு செய்தோம். தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்த நான் எனது விருப்பத்தை பிலிப்பிடம் தெரிவித்தேன். அவரும் சம்மதம் தெரிவித்தார்.
இதனையடுத்து எங்கள் நாட்டுக்கு சென்று எங்கள் முறைப்படி நிச்சயதார்த்தம் செய்த நாங்கள் மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி திருவண்ணாமலைக்கு வந்தோம். இதையடுத்து எங்களது திருமணம் தமிழ்கலாசாரப்படி இனிதாக நிறைவேறியது. இந்த தருணம் வாழ்க்கையில் நான் மறக்க முடியாத தருணம்.
இவ்வாறு அவர் கூறினார்.