இந்திய அணியின் சிறந்த வீரராக செயல்பட்ட யுவராஜ் சிங் சில வருடங்களாக ஓரங்கட்டப்பட்டு வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆஸ்திரேலியா தொடரில் டி20 அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் டி20 உலகக்கோப்பை வரை விளையாடினார். காலிறுதி போட்டியில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அதன்பின் இந்திய அணியில் இடம் பெறவில்லை.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 50 ஓவர் மற்றும் டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் இரண்டு வகை கிரிக்கெட்டிற்கான அணியிலும் யுவராஜ் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.
50 ஓவர் போட்டியில் சுமார் மூன்று வருடங்களாக இடம்பெறாமல் இருந்த அவர், தற்போது அணியில் இடம்பிடித்துள்ளார். யுவராஜ் சிங் அணியில் இடம்பிடித்தது குறித்து தலைமை தேர்வாளர் எம்.எஸ்.கே. பிரசாத் கூறுகையில் ‘‘யுவராஜ் சிங் உள்ளூர் போட்டிகளில் எப்படி விளையாடினார் என்பதை நாம் கண்டிப்பாக பாராட்ட வேண்டும். உண்மையிலேயே, நீண்ட நாட்கள் விளையாடாமல் இருந்தார் என்று நாம் நினைத்திருப்போம்.
இந்த உள்ளூர் தொடரில் சில இன்னிங்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இரட்டை சதம், 180 என ரன்கள் குவித்துள்ளார். உள்ளூர் தொடரில் சிறப்பாக விளையாடியதால் அவருக்கு புதிய வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
யுவராஜ் சிங் கடைசியாக தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக செஞ்சூரியனில் 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இடம்பிடித்திருந்தார். அதன்பின் தற்போது சரியாக மூன்று வருடங்கள் கழித்து அணியில் இடம்பிடித்துள்ளார்.