பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் அனுபவ வீரர்களான யூனிஸ்கான் மற்றும் மிஸ்பா உல் ஹக் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.
யூனிஸ்கானுக்கு 39 வயதாகிறது. தற்போது பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் யூனிஸ்கான் மிகவும் மோசமாக விளையாடினார். இதனால் அவர் ஓய்வு பெறுவாரா? என்ற கேள்வி எழும்பியது.
ஆனால் சிட்னியில் நடைபெற்று வரும் போட்டியில் முதல் இன்னிங்சில் 175 ரன்கள் குவித்தார். இது அவரது 34-வது சதமாகும். மேலும், ஆஸ்திரேலிய மண்ணில் முதல் சதத்தை பதிவு செய்துள்ளார். அவர் 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்ட இன்னும் 36 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
2-வது இன்னிங்சில் இந்த ரன்னை எடுக்காவிடில் மற்றொரு தொடருக்காக யூனிஸ்கான் காத்திருக்க வேண்டும். ஆகையால், 10 ஆயிரம் ரன்கள் என்பது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை பொறுத்ததுதான் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து யூனிஸ்கான் கூறுகையில் ‘‘பாகிஸ்கான் கிரிக்கெட் வாரியம் என்ன விரும்புகிறதோ, அதைப் பொறுத்துதான் நான் அணியில் இடம்பெறுவது சார்ந்திருக்கும். நான் 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டும் முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையின் விளிம்பில் உள்ளேன். தற்போது இதுபற்றிய விவாதம் அல்ல.
பாகிஸ்தான் வீரர்கள் யாரும் இந்த அரிய சாதனையை நிகழ்த்தவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். ஆகவே, இது அனைத்தும் அணி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆகியவற்றைச் சார்ந்துதான் இருக்கிறது.
நான் பாகிஸ்தான் நாட்டின் சிறந்த பேட்ஸ்மேன் என்று நினைக்கவில்லை. அந்த வரிசையில் ஜாவேத் மியான்தத், ஜாகீர் அப்பாஸ் போன்றோர் உள்ளனர். மேலும், ஏராளமான சிறந்த வீரர்கள் உள்ளனர். அதில் இன்சமாம் உல் ஹக்கும் அடங்குவார். நான் எப்போதும் அணிக்காகவும், நாட்டிற்காகவும்தான் விளையாடினேன் என்று என்னுடைய ரசிகர்களுக்கும், என்னை விமர்சனம் செய்தவர்களுக்கும் தெரிய வேண்டும். இதுதான் எனக்கு முக்கியமானது’’ என்றார்.