திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்படுகிறது. இலவச தரிசனத்துக்கு 6 மணிநேரமும், திவ்ய தரிசனத்துக்கு 3 மணிநேரமும், பிரத்யேக பிரவேச தரிசனத்துக்கு 2 மணிநேரமும் ஆகிறது.
கடந்த 2016-ம் ஆண்டு உண்டியல் வருமானமாக மொத்தம் ரூ.1,016 கோடி கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடி இ.டெண்டர் மூலமாக ஏலம் விடப்படும். அதேபோல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட காணிக்கைத் தலைமுடி ஏலம் விடப்பட்டது.
31 அங்குலம் நீளமுள்ள முதல் ரக தலைமுடி கிலோ ரூ.24 ஆயிரத்து 285 வீதம் 5 ஆயிரத்து 300 கிலோ ஏலத்தில் வைக்கப்பட்டது. அதில் 100 கிலோ ஏலம் போனதில் கிடைத்த வருமானம் ரூ.24 லட்சத்து 29 ஆயிரம். 16லிருந்து 30 அங்குலம் நீளமுள்ள 2-வது ரக தலைமுடி கிலோ ரூ.18 ஆயிரத்து 90 வீதம் 41 ஆயிரத்து 100 கிலோ ஏலத்தில் வைக்கப்பட்டது. அதில் 2 ஆயிரத்து 500 கிலோ ஏலம் போனது. அதன் மூலம் ரூ.4 கோடியே 53 லட்சம் வருமானம் கிடைத்தது. 10 லிருந்து 15 அங்குலம் நீளமுள்ள 3-வது ரக தலைமுடி கிலோ ரூ.2 ஆயிரத்து 540 வீதம் ஆயிரம் கிலோ ஏலத்தில் வைக்கப்பட்டது. அதில் 1000 கிலோவும் ஏலம் போனது. அதன் மூலம் ரூ.25 லட்சத்து 70 ஆயிரம் வருமானம் கிடைத்தது.
5 லிருந்து 9 அங்குலம் நீளமுள்ள 4-வது ரக தலைமுடி கிலோ ரூ.1,023 வீதம் 100 கிலோ ஏலத்தில் வைக்கப்பட்டது. அதில் 100 கிலோவும் ஏலம் போனது. அதன் மூலம் ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் வருமானம் கிடைத்தது. 5 அங்குலத்துக்கு குறைவான தலைமுடி கிலோ ரூ.30 வீதம் 53 ஆயிரத்து 200 கிலோ ஏலத்தில் வைக்கப்பட்டது. அதில் 3 ஆயிரம் கிலோ ஏலம்போனது. அதன் மூலம் ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் வருமானம் கிடைத்தது.
வெள்ளைநிற தலைமுடி கிலோ ரூ.6 ஆயிரத்து 706 வீதம் 3 ஆயிரத்து 300 கிலோ ஏலத்தில் வைக்கப்பட்டது. வெள்ளைநிற தலைமுடி எதுவும் ஏலம் போகவில்லை. ஆக மொத்தம் 1,700 கிலோ தலைமுடி விற்பனையானது. அதன் மூலம் மொத்தம் ரூ.5 கோடியே 5 ஆயிரத்துக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு வருமானம் கிடைத்ததாக இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு தெரிவித்துள்ளார்.