தமிழக முதலமைச்சரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மரணம் அடைந்ததையடுத்து அவர் வகித்து வந்த முதலமைச்சர் பதவிக்கு ஓ. பன்னீர்செல்வம் உடனடியாக தேர்வு செய்யப்பட்டு பதவியில் அமர்த்தப்பட்டார். அதன்பின்னர், கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்வு செய்யப்பட்டு, அவரும் பதவியேற்று கட்சி பணிகளை தொடங்கியுள்ளார்.
இதற்கிடையே, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை அரசியலுக்கு வரும்படி அ.தி.மு.க.வினர் பலர் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டிற்கு தினமும் கட்சியினர் வந்து ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர். ஆனால், தீபாவோ தான் அரசியலுக்கு வருவது பற்றி உறுதியாக எந்த முடிவையும் அறிவிக்காமல் உள்ளார்.
அதேசமயம் கட்சியில் உள்ள தொண்டர்களின் கருத்துக்களையும் அவர்களின் உணர்வுகளையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார். எனவே, அவர் விரைவில் அரசியலுக்கு வந்து ஜெயலலிதாவின் வாரிசாக மக்களை சந்திக்கலாம் என்ற பேச்சு பரவலாக இருந்தது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று தி.நகரில் உள்ள தீபாவின் வீட்டில் வழக்கத்தைவிட ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். இதனால், முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என பத்திரிகையாளர்களும் திரண்டனர்.
இதையடுத்து மாலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த தீபா, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் கூறியதாவது:-
தொண்டர்கள் அனைவரும் பொறுமை காக்க வேண்டும். தொண்டர்களும் மக்களும் விரும்பினால் மக்கள் பணி செய்ய தயங்க மாட்டேன். அரசியலுக்கு வருவதா? வேண்டாமா? என்பது பற்றி மக்களையும் தொண்டர்களையும் கலந்து ஆலோசித்து விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன்.
மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள், என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டு என்னை தயார்படுத்தி அதன்பின்னர் எனது முடிவை அறிவிப்பேன். குறிப்பாக ஆதரவாளர்களின் விருப்பத்திறகு ஏற்ப எனது முடிவு இருக்கும். எம்.ஜி.ஆரின் நூற்றாண்டை அனைவரும் கொண்டாட வேண்டும். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகழை காக்கும் கடமை நமக்கு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன்மூலம், தனக்கு ஆதரவு தெரிவிக்கும் தொண்டர்களின் விருப்பத்தை ஏற்று தீபா அரசியலுக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.