புதுவையின் அனைத்து நிர்வாகப் பணிகளுக்கும் நானே பொறுப்பு: கிரண் பெடி அதிரடி!

புதுவை மாநிலத்தில் துணைநிலை ஆளுநர் கிரண் பெடிக்கும், முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. ஆளுநர் மீது அமைச்சரின் குற்றச்சாட்டு, அவரது அதிகாரம் குறித்து முதல்வரின் கருத்து, வாட்ஸ்அப் விவகாரம், முதல்வரின் சுற்றறிக்கையை ஆளுநர் ரத்து செய்தது போன்றவற்றால் இந்த பனிப்போர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தனக்குத்தான் அதிக அதிகாரம் உள்ளது என்று ஆளுநர் கூறியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக கிரண் பெடி இன்று புதுச்சேரி மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து நிர்வாகப் பணிகளுக்கும் நானே பொறுப்பு. ஆளுநர் மாளிகை வெறும் தபால் நிலையமாக இருக்காது. புதுச்சேரி மக்களுக்கு இனி மாதம் ஒரு கடிதம் எழுதுவேன். நிதி மதிப்பீடுகள் மற்றும் முடிகளில் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுவேன்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம்தான். எனது அணுகுமுறையானது யாரையும் தண்டிக்கும் நோக்கம் கொண்டதல்ல.
யாருக்கு அதிகம் தேவைப்படுகிறோ அவர்களுக்கு பொது நிதி பயன்பட வேண்டும்.

சட்டத்தின் ஆட்சியை அச்சமின்றி, யாருக்கும் சாதகமின்றி அமல்படுத்துவேன். புதுச்சேரியில் ஒற்றுமையை தழைத்தோங்க செய்வதே எனது கடமையாகும்.

இவ்வாறு கிரண்பெடி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.