காணிகள் பறிபோகும் போது மக்கள் போராடுவது சாதாரணமானது : மகிந்த

நல்லாட்சி அரசாங்கம் கவிழக் கூடிய அடையாளங்கள் தற்போது தென்பட ஆரம்பித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் எதிர்ப்பில் ஈடுபட்ட கிராமவாசிகள் மீதான தாக்குதல் உட்பட பல்வேறு சம்பவங்கள் மூலம் நாட்டின் ஜனநாயகம், நல்லாட்சி மற்றும் சட்டத்தின் ஆதிபத்தியம் வீழ்ச்சியடைந்துள்ளமை தெளிவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் இன்று தலதா மாளிகைக்கு சென்று வழிப்பாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே மகிந்த ராஜபக்ச இதனை கூறியுள்ளார்.

தலதா மாளிகைக்கு சென்ற மகிந்த ராஜபக்ச புத்த பகவானின் புனித தந்தத்தை வழிப்பட்டார். தியவடன நிலமே திலங்க தெலே பண்டார, முன்னாள் ஜனாதிபதியை வரவேற்றார்.

இதனையடுத்து அஸ்கிரிய மாநாயக்கர் வரகாகொட ஞானரத்ன தேரர் மற்றும் மல்வத்து மாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் ஆகியோரை சந்தித்து ஆசிப் பெற்றுக்கொண்டார்.

அங்கு கருத்து வெளியிட்ட மகிந்த ராஜபக்ச, 15 ஆயிரம் ஏக்கர் இல்லாமல் போகும் என்பது சிறிய விடயமல்ல. கிராமத்தில் உள்ள தமது காணிகள் பறிபோகும் போது மக்கள் எதிர்ப்பை வெளியிடுவது சாதாரணமானது. இப்படியான எதிர்ப்பில் ஈடுபடுபவர்கள் மீது தாக்குதல் நடத்துவது பொருத்தமற்றது. பிக்குமார் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சட்டத்தின் ஆதிபத்தியம் வீழ்ச்சியடைந்துள்ளமைக்கான அடையாளங்களை தெளிவாக காணமுடிகிறது.

ஹம்பாந்தோட்டை தொடர்பாக எந்த புரிந்துணர்வும் இல்லாத அரச தலைவர்கள் ஹம்பாந்தோட்டை பற்றி கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த பிரதேசம் பற்றிய புரிதல் இருக்க வேண்டும்.

பொலிஸ் மா அதிபர் தற்போது பொலிஸ் துறையின் கௌரவத்தை இழக்க செய்துள்ளார்.

Yes sir No sir என உயர்மட்டத்தினருக்கு அடிப்பணிந்துள்ளதால், பொலிஸார் கௌரவத்தை இழந்துள்ளனர்.

மேலும் எனது பாதுகாவலர்களில் 12 பேர் அண்மையில் விலக்கி கொள்ளப்பட்டுள்ளனர் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.