மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து கொண்டால் மக்கள் ஆட்சியொன்றை உருவாக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முகநூல் வழியாக மக்களின் கேள்விகளுக்கு இன்று பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், நாட்டின் அனைத்து சக்திகளும் இணைந்தால் புதிய மக்கள் அரசாங்கமொன்றை அமைப்பது கடினமானதல்ல.
ஹம்பாந்தோட்டையில் நடத்தப்பட்டு வரும் போராட்டங்கள் சீனாவிற்கோ அல்லது அபிவிருத்தித் திட்டங்களுக்கோ எதிரானவை அல்ல. எமது அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் நாட்டின் சொத்துக்கள் வெளிநாடுளுக்கு விற்பனை செய்யக் கூடாது.
எமது மூத்த தலைமுறையினரின் காணிகள் எந்தவொரு காரணத்திற்காகவும் விற்பனை செய்ய இடமளிக்க முடியாது.
எதிர்கால சந்ததியினரை காப்பதற்கு நிபந்தனையின்றி குரல் கொடுப்போம்.
நாட்டை விற்பனை செய்வதனை தடுக்க மக்களினால் மட்டுமே முடியும். நாம் அனைவரும் இணைந்து பாரிய மக்கள் சக்தியொன்றை உருவாக்க வேண்டும்.
அரசாங்கம் பொருளாதாரத்தை மிகவும் மோசமான முறையில் நிர்வாகம் செய்து வருகின்றது.
எனக்கு எதிராக சுமத்தப்பட்டு வரும் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நிராகரிக்கின்றேன். அரசாங்கம் அதிகாரத்தையும் அரச ஊடகங்களையும் பயன்படுத்தி இவ்வாறு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.