தற்போதுள்ள அரசியல் சூழலில் ரஜினி அரசியலுக்கு வந்தால் வெற்றி பெறுவது கடினம் தான் என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது.
இதில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், குமரி அனந்தன், இளங்கோவன், தங்கபாலு, தனுஷ்கோடி ஆதித்தன், கார்த்திக் சிதம்பரம், குஷ்பு ஆகியோர் பங்கேற்றனர்.
இவர்களுடன் எம்.எல்.ஏக்கள் உட்பட 200 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில், ஜெயலலிதாவிற்கு இரங்கல், விவசாயிகளின் மரணம், செல்லாத நோட்டு விவகாரம், மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதையடுத்து, இறுதியில் கூட்டம் முடிந்து செய்தியாளார்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், நடிகர் சிவாஜி சிலையை கடற்கரை சாலையிலேயே வைப்பது குறித்து நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வரை சந்திக்க தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
பின்பு, செய்தியாளர்களில் ஒருவர், ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என ரசிகர்கள் அழைப்பு விடுக்கின்றனரே…. தற்போதுள்ள சூழலில் அவர் அரசியலுக்கு வந்தால் ஜெயிக்க முடியுமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு, நடிகர் ரஜினிகாந்த் 20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வந்திருந்தால் அவரால் வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால் தற்போதுள்ள சூழலில் அது மிகவும் கடினமான ஒன்று தான் என்று தெரிவித்துள்ளார்.