பழங்காலத்தில் சல்லி காசு என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடப்படும் பழக்கம் இருந்தது.
மாட்டை அணையும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும். இந்த பழக்கம் பிற்காலத்தில் சல்லிகட்டு என்று மாறியது. பேச்சு வழக்கில் அது திரிந்து ஜல்லிக்கட்டு என்று ஆனது. பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.
ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக் கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் கொல்லேறு தழுவுதல் என்றும் சிறப்பித்துக்
கூறப்படுகிறது. புது தில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து கி.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது என்று ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மேலும், பழந்தமிழர் வாழ்க்கை காதலையும் வீரத்தையும் அடிப்படையாகக் கொண்டது. இக்கருதிற்கேற்ப பழந்தமிழகத்தில் நடைப்பெற்ற வீர விளையாட்டுகளுள் ஏறுதழுவுதலும் ஒன்றாக அமைந்துள்ளது. இவ்விளையாட்டை மேற்கொள்ளும் ஆடவரின் வீரத்தையும், காதலையும் புலப்படுத்துகிறது.
கட்டின்றித் திரியும் வலிய காளையினை ஒரு வீரன் அடக்கும் செயல் ஏறு தழுவல் என்று கூறப்படுகிறது. வீறுமிக்க காளையினை வலியடக்கி அதனை அகப்படுத்துதல் என்னும் கருத்தில் இதனை ‘ஏறுகோடல்’ என்றும் குறிப்பிடுகின்றனர்.
ஏற்றினை அடக்கும் போது அதனால் ஏற்படும் இடர்களுக்கு அஞ்சாது அதன் மீது பாய்ந்தேறி அடக்குவதினால் இச்செயல் அவனது வீரத்தைப் புலப்படுத்துவதாக அமைவதினால் ‘தழுவல்’ என்னும் சொல்லோடு சேர்த்து ஏறுதழுவல் என பழந்தமிழர்கள் குறிப்பிடுகின்றனர்.
இன்றைய நாட்களில் ஏறுதழுவல் என்பது, பொங்கல் திருநாளை அடுத்து மாட்டுப் பொங்கல் கொண்டாடிய பின்னர்ப் பொதுவாக பரிசுப் பொருள்கள் கட்டி ஊர்ப் பொதுவிடங்களில் இளைஞர் பிடிக்குமாறு விடும் ஒரு விழாவாக நடைபெறுகிறது. ஏறு தழுவல் இக்காலத்தில் மஞ்சிவிரட்டு, ஜல்லிக்கட்டு என்னும் பெயர்களில் வழங்கிவருகிறது.
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டு மிகவும் பிரசித்திப்பெற்றது. பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை பகுதில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடத்தப்பட்டுவருகிறது. இதில் அலங்காநல்லூர் பாலமேடு ஜல்லிக்கட்டு உலக பிரசித்திப்பெற்றதாகும். மதுரை அருகே அவனியாபுரத்தில்தான் முதலில் அதாவது பொங்கல் அன்றே ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.
மேலும் திருச்சி மாவட்டம் கூத்தைப்பான், தஞ்சை மாவட்டம் மாதாக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் தத்தன்குரிசி, போன்ற ஊர்களில் நீதிமன்ற அனுமதியுடன் இன்றும் ஜல்லிக்கட்டு நடைபெற்றுவருகிறது. கடந்த சில ஆண்டுகளாக தடைகளை கடந்துதான் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.
இந்தாண்டும், ஜல்லிக்கட்டின் மீதான தடையை நீக்கக்கோரி பல இடங்களில் போரட்டம் நடந்து வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி சென்னை மெரினாவில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.