புத்தாண்டு தினத்தன்று பெங்களூரில் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் நடைபெற்றன. டெல்லியிலும் இதுபோல பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்றன. இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன.
இதுபற்றி பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர், ”பெண்கள் மேற்கத்திய பாணியில் அரைகுறை ஆடைகள் அணிவதாலேயே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன” என்று கருத்துத் தெரிவித்தார். இந்தக் கருத்து நாடு முழுவதும் பலத்த விவாதங்களை எழுப்பியது.
இந்நிலையில் நடிகர் சித்தார்த் இந்த சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் “நம்மிடமிருந்து இந்தியப் பெண்களை யார் பாதுகாப்பார்கள்? இந்த உலகத்தில் மிக மோசமான இழிவான ஆண்கள் மத்தியில் நாம் இருக்கிறோம். இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். வெட்கப்படுகிறேன்.
ஒரு பெண் என்ன உடை அணிய வேண்டும்? என நீங்கள் தீர்மானிக்காதீர்கள். பெண் மீதான ஆடைகள் குறித்து கருத்து சொல்வதை நிறுத்துங்கள். பெண்கள் மீதான பாலியல் வன்முறை, கற்பழிப்பு ஆகியவை இங்கு நியாயப்படுத்தப்படுகின்றன. நீங்கள் ஒரு விஷயத்தைப் பார்ப்பதால் அது உங்களுக்கு சொந்தமாகி விடாது. உங்கள் பார்வையை மாற்றுங்கள்” என்று கூறியிருக்கிறார்.
சித்தார்த்தின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்புக் கிடைத்துள்ளது.