நியூசிலாந்து – வங்காள தேசத்திற்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது வங்காளதேசம்.
அதன்படி முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து 6.1 ஓவரில் 41 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. 5-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய கோரி ஆண்டர்சன் வங்காள தேசத்தின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். அவர் 41 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.
இதில் 10 சிக்சர்களும், 2 பவுண்டரிகளும் அடங்கும். 10 சிக்சர்கள் அடித்ததன் மூலம் 20 ஓவர் போட்டியில் ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர் அடித்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை ஆண்டர்சன் படைத்தார். இதற்கு முன்பு பிராண்ன் மெக்கல்லம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2010-ல் 8 சிக்சர் அடித்ததே சாதனையாக இருந்தது.
சர்வதேச அளவில் அதிக சிக்சர் அடித்த வீரர்களில் கிறிஸ் கெய்லுடன் (வெஸ்ட் இண்டீஸ்) இணைந்து 4-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கெய்ல் 10 சிக்சர்கள் மற்றும் 11 சிக்சர்களும் அடித்துள்ளார். ஆஸ்திரேலியா வீரர் ஆரோன் பிஞ்ச் 14 சிக்சர் அடித்து முதல் இடத்திலும், லெவி (தென்ஆப்பிரிக்கா) 13 சிக்சர் அடித்து 2-வது இடத்திலும் உள்ளனர்.