இலங்கையை பசுமை எரிசக்தி நாடாக மாற்றியமைக்கும் தேசிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் அரச நிறுவனங்கள் சூரிய சக்தியுடனான மின்சக்தியைப் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதன் முதலாவது கட்டம் இன்று நிதியமைச்சில் ஆரம்பிக்கப்பட உள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலைபேறான அபிவிருத்தி வேலைத்திட்டம் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் துரித பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கையின் கீழ் இந்த வேலைத்திட்டம் நாடு முழுவதிலும் பிரபல்யப்படுத்தப்படவுள்ளன.
எரிசக்தி பிரச்சினைக்கு தீர்வாக பசுமை எரிசக்தி தொடர்பில் முழு உலகமும் கவனஞ் செலுத்தியுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இலங்கைக்கு இதற்காக வெற்றிகரமான பிரவேசத்திற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் மின்னுற்பத்தி 4000 மெகாவொட் மட்டத்திலேயே அமைந்துள்ளது. நாட்டின் துரிதமான அபிவிருத்தி காரணமாக 2020ம் ஆண்டளவில் மின்சாரத் தேவை 5300 மெகா வோட்ஸாக அதிகரிப்பதுடன் 2025ம் ஆண்டளவில் இத்தொகை 7500 மெகா வோட்ஸாக அதிகரிக்கப்படுமென்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சவாலுக்கு இன்றிலிருந்து முகங்கொடுக்கும் வகையிலேயே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இரண்டாயிரம் ரூபாவுக்கு மேற்பட்ட மாதாந்த மின்கட்டணத்தை செலுத்தும் பாவனையாளர்களுக்கு தமது எரிசக்தியை பசுமை எரிசக்தியாக மாற்றுவதற்கு அரசாங்கம் வசதிகளைச் செய்து கொடுக்க உள்ளது. இதற்காக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாவை கடனாகப் பெற்றுக் கொள்ள முடியும்.
வங்கிகளுக்கு 50 சதவீத பணம் அரசாங்கத்தினால் செலுத்தப்படும். எஞ்சிய இரண்டு வருட காலப்பகுதிக்குள் அரசாங்கம் அனைத்து கட்டடங்களுக்கும் பசுமை எரிசக்திக்கான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது. இதன் ஆரம்பமாக இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் 350 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.