மாத இறுதியில் புதிய அரசியல் அமைப்பு குறித்த யோசனைகள்!

புதிய அரசியல் அமைப்பு குறித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யோசனைகள் இந்த மாத இறுதியில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

புதிய அரசியல் அமைப்பு குறித்த யோசனைகள் மற்றும் பரிந்துரைகள் இந்த மாத இறுதியில் கூடும் அரசியல் அமைப்பு செயற்குழுவிடம் ஒப்படைக்கப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அரசியல் அமைப்பு செயற்குழு பிரதமர் தலைமையில் இந்த மாத இறுதியில் கூட உள்ளது.

இதற்கு முன்னதாக சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு வெளிப்படுத்தப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார் என செயற்குழுவின் உறுப்பினர் ஒருவர் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் ஜே.வி.பி கட்சி இதுவரையில் யோசனைகளை முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து அரசியல் கட்சிகளினதும் யோசனைகள் கிடைக்கப் பெற்றதன் பின்னர் இடைக்கால அறிக்கையொன்று பெப்ரவரி மாதம் அரசியல் அமைப்புச் சபையிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் அமைப்பு குறித்த ஆறு இணைக் குழுக்களின் அறிக்கைகள் மற்றும் செயற்குழுவின் இடைக்கால அறிக்கை ஆகியனவற்றை ஆராய்ந்து அதன் பின்னர் அரசியல் அமைப்பு தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட உள்ளது.