நாட்டை அபிவிருத்தி செய்ய புதிய அரசாங்கம் தேவையில்லை! ஜனாதிபதி

எவரும் தன்னுடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க அவசியமில்லை எனவும் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்துடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்குமாறு அனைவரிடமும் கோரிக்கை விடுப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவியேற்று இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற தேசிய வைபவத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கால அதிகாரம் சம்பந்தமாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் வெளியிட்டு வரும் கருத்துக்கள் அனைத்தும் புஷ்வாணம் எனவும் அவை சமூக விரோத கருத்துக்களாக தான் காண்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இப்படியான கருத்துக்களை வெளியிடாது, நாட்டின் உண்மையான பிரச்சினைகளை புரிந்து கொண்டு அவற்றை தீர்க்க அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துள்ளது.

இரண்டு கட்சிகள் இணைந்து ஆட்சி நடத்துவதை விமர்சிக்கக் கூடாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.