இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதா- இல்லையா என்பதை மக்களே தீர்மானிப்பார்கள் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தச் செவ்வியில் அவர், தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் அல்ல என்றும், அதேவேளை புதிதாக ஆரம்பிக்கப்பட்டள்ள அரசியல் கட்சியிலும் தாம் உறுப்பினராக இல்லை என்றும் கூறியுள்ளார்.
புதிய அரசியல் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசியலில் இறங்கவுள்ளதாக வெளியாகும் ஊகங்கள் பற்றிய கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர், இதுபற்றி தாம் எந்த முடிவையும் இன்னமும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், 2020 ஆண்டு நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு அவர், அதனை மக்களே முடிவு செய்வார்கள் என்றும் கோத்தபாய ராஜபக்ச பதிலளித்துள்ளார்.