தமிழ் பேசும் மக்களின் நம்பிக்கையை குழிதோண்டி புதைக்கக்கூடாது!

பல்வேறு வாக்குறுதிகளை வாரி வழங்கி மாறி மாறிப் பதவிக்கு வரும் அரசாங்கங்கள் தமிழ் பேசும் சிறுபான்மை மக்களை ஏமாற்றும் விதமாகவும் அவர்கள் மீது சவாரி செய்யும் வகையிலுமே தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தமிழ் மக்கள் மிகுந்த விசனம் தெரிவிக்கின்றனர்.

அந்த வகையில் நல்லாட்சி அரசின் போக்கும், முன்னைய அரசின் போக்கை ஒத்ததாகவே இருந்து வருவதாகவும் அதனால் நம்பிக்கையீனங்களே மேலோங்குவதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது.

நல்லிணக்கப் பொறிமுறை குறித்த செயலணியின் பரிந்துரையினை அரசாங்கம் தற்பொழுது நிராகரித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் மனோரி முத்தெட்டுவேகம தலைமையில் அமைக்கப்பட்டதே குறித்த நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான மக்கள் கருத்தறியும் செயலணியாகும். இதில் 12 புத்திஜீவிகள் அடங்கியிருந்தனர்.

இந்நிலையில் அவர்களால் தயாரிக்கப்பட்ட அறிக்கையானது கடந்த செவ்வாய்க்கிழமை, முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தின் தலைவருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கையளிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில், சர்வதேச நீதிபதிகளின் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டிருந்தது. இதுவே குறித்த அறிக்கை நிராகரிக்கப்படக் காரணமாகும்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன, ”பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்கும் பொறிமுறையில் எக்காரணம் கொண்டும் சர்வதேச நீதிபதிகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் சாத்தியமில்லை. நாங்கள் நியமித்த செயலணியின் சகல பரிந்துரைகளையும் ஏற்றுக்கொள்ளும் அவசியமில்லை. சர்வதேச நீதிபதிகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதை ஐ.நாவிடம் தெளிவுப்படுத்திவிட்டோம்” என்று கூறியுள்ளார்.

அத்தோடு மாத்திரம் அமைச்சர் நின்று விடவில்லை. ”செயலணியிலுள்ளவர்கள் பெரும் புத்திஜீவிகளல்ல. எமது நாட்டைச் சேர்ந்தவர்களே. எனவே இவர்களின் பரிந்துரைகளை கட்டாயம் ஏற்க வேண்டுமென்ற எந்த நியதியும் கிடையாது” என்றும் கூறியுள்ளார்.

இந்த செயலணியானது நாடு முழுவதும் 1306 கலந்துரையாடல்கள் , 4872 பொதுக் கூட்டங்கள் ,1048 எழுத்துரு சமர்ப்பிப்புக்கள் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதனை நேரடியாக ஜனாதிபதியிடம் கையளிக்க இரு தடவைகள் முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது சாத்தியமாகாத நிலையிலேயே இறுதியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நீதிபதிகளை ஒருபோதும் உள்வாங்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாகவே கூறி வருகிறார்.இந்நிலையில் நல்லிணக்கப் பொறிமுறை குறித்த செயலணி, சர்வதேச நீதிபதிகளின் அவசியத்தை வலியுறுத்துவது அவருக்கு தர்ம சங்கடமான நிலையைத் தோற்றுவித்திருக்கலாம். அதுவே அறிக்கையை அவர் நேரடியாகக் கையேற்காமைக்கான காரணம் என்றும் கூறப்படுகின்றது.

மறுபுறம், தென்னிலங்கை சக்திகள் போர்க்கொடி தூக்க இது வாய்ப்பாகி விடும் என்றும் அவர் கருதியிருக்கலாம்.எவ்வாறெனினும், குறித்த செயலணியின் பரிந்துரைகள் அரசாங்கத்துக்கு சவால் மிக்கதாக மாறி விடுமோ என்ற அச்சம் அரச தரப்பினர் மத்தியில் ஏற்பட்டுள்ளதை அவர்களின் திடீர் நிராகரிப்பு எடுத்துக் காட்டுவதாகவே கொள்ள வேண்டும்.

குறித்த செயலணியின் பரிந்துரையில் போர்க்குற்றங்கள், மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், ஆட்கடத்தல், சித்திரவதை, பாலியல் வன்புணர்வு போன்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றமிழைத்தவர்களால் உண்மையை ஒப்புக்கொள்வதன் வாயிலாக மன்னிப்புக் கோருவதை ஏற்க முடியாது. அது சட்டவிரோதமானது என பரிந்துரைக்கின்றது.

இந்த செயலணியின் பரிந்துரைகள் அரசின் மீதுள்ள பொறுப்பையும் அரசாங்கம் அதனை நிறைவேற்ற வேண்டிய கடப்பாட்டையும் சுட்டிக்காட்டுகின்றன.

அந்த வகையில் செயலணியின் பரிந்துரைகளை அரசு செயற்படுத்த முனைந்தால் மறுபுறம், எதிர்த்தரப்பின் அரசுக்கு எதிரான பிரசாரத்துக்கு வாய்ப்பாகப் போய்விடும் என்ற அச்சமும், அரசாங்கம் விழுந்தடித்துக் கொண்டு அதனை நிராகரித்தமைக்கான காரணங்களில் முக்கியமானதாக அமையலாம்.

இதேவேளை, ”பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் பொறிமுறை நம்பகரமாகவும் இயலுமை கொண்டதாகவும் அமைய வேண்டும் என்பதற்காகவே மக்களின் கருத்துக்களுக்கு அமைவாக சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டுமென்ற கோரிக்கையை நாம் பரிந்துரை செய்தோம். வடக்கு, கிழக்கு மக்கள் மாத்திரமன்றி, தென்னிலங்கை மக்களும் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்” என நல்லிணக்க பொறிமுறை தொடர்பான செயலணி விளக்கமளித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள செயலணியின் பொதுச் செயலாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, ”நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. நாங்கள் கலப்பு நீதிமன்ற பொறிமுறையை முன்வைத்துள்ளோம். ஜெனீவா பிரேரணையிலும் இவ்விடயம் உள்ளடங்கியுள்ளது. நம்பகத்தன்மை மற்றும் அனுபவம் ஆகிய இரு விடயங்களுக்காகவே சர்வதேச நீதிபதிகளை மக்கள் கோருகின்றனர்” என்று கூறியுள்ளார்.

செயலணியின் உறுப்பினரான சித்திரலேகா மௌனகுரு இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “உண்மை, நீதி ஆகிய இரண்டுமே தமக்குத் தேவை என மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றனர். அந்த வகையில் மக்களின் கருத்துக்களே பரிந்துரைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன. போரினால் ஏற்பட்டுள்ள வடுக்களை நீக்குவதற்கு நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும். இதனை மக்கள் வலியுறுத்தி கூறியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

செயலணியின் இதர உறுப்பினர்களும் தாங்கள் மக்களின் கருத்துக்களைப் பிரதிபலிப்பதாகவே கூறியுள்ளனர். செயலணியின் தலைவர் மனோரி முத்தெட்டுவேகம, 92 உறுப்பினர்கள், வலய ரீதியில் 15 செயலணிகளை நியமித்து மக்களின் கருத்துக்களை நாடு தழுவிய ரீதியில் சுயாதீனமாகப் பெற்றதாகவும் அந்த வகையில் அவர்களின் பரிந்துரைகளையே அறிக்கையாக முன்வைத்ததாகவும் கூறியுள்ளார்.

நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான மக்கள் கருத்தறியும் செயலணியின் முன் பிரசன்னமான வடக்கு, கிழக்கு மாத்திரமன்றி தென்னிலங்கை மக்களும் விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளமை புலனாகின்றது.

அத்துடன் வடக்கு, கிழக்கு மக்கள் காணாமல் போனோர் தொடர்பில் சர்வதேச மட்ட தடயவியலாளர்களின் பிரசன்னத்தின் அவசியம் குறித்தும் வலியுறுத்தியுள்ளனர்.

இவ்வாறான பின்னணியில் கடந்த காலத்தில் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கை எவ்வாறு குப்பைத் தொட்டியில் போடப்பட்டதோ அவ்வாறானதோர் சூழ்நிலையே இதற்கும் ஏற்படுமோ என்ற ஐயம் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சிறுபான்மை தமிழ் மக்கள் விவகாரத்தில் முன்னைய அரசுகள் மேற்கொண்ட அனைத்து விடயங்களும் வெறும் கண்துடைப்பென்பதை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்து வைத்துள்ளனர்.

மீண்டும் அதேவகையான சூழல் ஏற்படாதிருப்பதை உறுதி செய்வது அரசின் கடப்பாடாகும்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது உள்நாட்டு விசாரணை பொறிமுறைகளால் ஒரு போதும் நீதி கிடைக்கப் போவதில்லை என்பதை நன்குணர்ந்த நிலையிலேயே சர்வதேச நீதிபதிகளை வலியுறுத்தி வருகின்றனர்.

அதற்கு வலு சேர்க்கும் வகையிலேயே அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் அமைந்துள்ளதாகக் கருத வேண்டியுள்ளது.

மக்களின் கருத்துக்களை நிராகரிப்பதானால் அத்தகைய செயலணியை அமைத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. மேலும் காலத்தை வெறுமனே வீணடித்த முயற்சியாகவே அது அமையும்.

அரசாங்கங்கள் தமிழ் பேசும் மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்ப முயற்சிக்க வேண்டும். மாறாக அதனை மேலும் மேலும் குழி தோண்டிப் புதைக்கக் கூடாது என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.