சென்னையில் அதிமுக தலைமைக் கழகத்திற்கு வந்த சசிகலா, அங்கு அதிமுக தொண்டரின் குழந்தைக்கு ஜெயலலிதா என பெயர் சூட்டினார்.
அதிமுக தலைமைக் கழகத்திற்கு தினசரி வருகிறார் சசிகலா. அங்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். இன்றும் அங்கு கூட்டம் கூடியிருந்தது. சசிகலாவும் வந்தார். ஆலோசனையும் நடத்தினார்.
அப்போது காத்திருந்த தொண்டர்களைப் பார்த்து அவர் வழக்கம் போல கையை அசைத்து இரட்டை விரலைக் காட்டினார். பால்கனியில் நின்று தொண்டர்களைப் பார்த்துக் கையசைத்தார். சசிகலாவைப் பார்க்கக் கூடியிருந்த தொண்டர்களிடையே காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த பெண் தொண்டரும் ஒருவர்.
குழந்தைக்கு ஜெயலலிதா பெயர்
அவர் தனது குழந்தைக்குப் பெயர் வைக்குமாறு சசிகலாவிடம் கோரிக்கை வைத்தார். இதை ஏற்று அந்தப் பெண் குழந்தைக்கு ஜெயலலிதா என பெயர் சூட்டினார் சசிகலா. பின்னர் அக்குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டும் வாழ்த்தினார்.
இதிலும் ஜெ. ஸ்டைல்தான்
எல்லாவற்றிலும் ஜெயலலிதாவை பின்பற்றி வரும் சசிகலா, குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதிலும், குழந்தைகளின் நெற்றியில் முத்தமிடுவதிலும் கூட ஜெயலலிதாவை அப்படியே பின்பற்றுவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இன்று 4வது நாளாக அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் சசிகலா. இன்று நெல்லை மாநகர், புறநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகளிடம் சசிகலா ஆலோசனை நடத்தினார்.
2வது மாடியிலிருந்து விரல் அசைப்பு
ஆலோசனைக் கூட்டத்திற்காக அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்கு வந்த சசிகலா முதலில் 2வது மாடிக்குப் போய் அங்கிருந்தபடி தொண்டர்களைப் பார்த்து இரு விரல்களைக் காட்டி கையசைத்தார். பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்டார். பேசினார்.
தெருமுனைப் பிரசாரம்
தனது பேச்சின்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் மாதம் ஒருமுறை தெருனைப் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்த வேண்டும்.
“அம்மா” மாதிரியே
நம்முடைய “புரட்சித் தலைவி அம்மா” எப்படி கட்சியை வழி நடத்தினாரோ அதேபோல நானும் உங்களை வழி நடத்துவேன். உழைப்புக்கு ஏற்ற மரியாதையும், அங்கீகாரமும் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்றார் சசிகலா.