டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் முதல் 5 இடங்களில் முறையே ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் (933 புள்ளி), இந்திய கேப்டன் விராட் கோலி (875 புள்ளி), இங்கிலாந்தின் ஜோ ரூட் (848 புள்ளி), நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் (817 புள்ளி), ஆஸ்திரேலிய துணை கேப்டன் டேவிட் வார்னர் (812 புள்ளி) ஆகியோர் தொடருகிறார்கள். ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் சதத்தை பதிவு செய்த பாகிஸ்தான் மூத்த வீரர் யூனிஸ்கான் (175 ரன்) 7 இடங்கள் முன்னேறி 7-வது இடத்துக்கு வந்துள்ளார்.
டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் (887 புள்ளி), ரவீந்திர ஜடேஜா (879 புள்ளி) ஆகியோர் முதல் இரு இடங்களில் நீடிக்கிறார்கள். சிட்னியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்டில் 7 விக்கெட்டுகளை சாய்த்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் 2 இடங்கள் ஏற்றம் கண்டு 3-வது இடத்தை (860 புள்ளி) பிடித்துள்ளார். இது அவரது சிறந்த தரவரிசையாகும்.
இதே போல் கேப்டவுன் டெஸ்டில் மொத்தம் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இலங்கையை வீழ்த்தியதில் பக்கபலமாக விளங்கிய தென்ஆப்பிரிக்க இளம் வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா மளமளவென 9 இடங்கள் அதிகரித்து 8-வது இடத்தை பெற்றுள்ளார். ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் அஸ்வினின் முதலிடத்துக்கு ஆபத்து இல்லை.
டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் இந்திய அணி 120 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 109 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்கா 102 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், இங்கிலாந்து 101 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்த பாகிஸ்தான் அணி இரு இடங்கள் சரிந்து 97 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.