ஆண்டுதோறும் நடைபெறும் இந்தியா டுடே கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கியது. பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்றுவரும் இந்த கருத்தரங்கத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா இன்று குத்துவிளக்கு ஏற்றி, தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், சென்னையில் நடைபெறும் இந்த கருத்தரங்கமும், இங்கு திறக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியும் ஜெயலலிதாவுக்கு செய்யப்படும் காணிக்கை என்று குறிப்பிட்டார்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையின் முக்கிய தருணங்களை உள்ளடக்கிய புகைப்பட கண்காட்சியையும் சசிகலா திறந்து வைத்தார்.
உங்களால் நான் உங்களுக்காக நான் என்று தனது வாழக்கை முழுவதையுமே தமிழக மக்களுக்காக அர்ப்பணித்து கொண்ட ஜெயலலிதாவின் சிறப்பான வாழ்க்கையை இந்த புகைப்பட கண்காட்சி உணர்த்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதல் மந்திரிகள் பங்கேற்பதை சுட்டிக்காட்டிய ஓ.பன்னீர் செல்வம், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு இறுதி மரியாதை செய்வதற்காக பல முதல் மந்திரிகள் ஒரே நேரத்தில் சென்னைக்கு வந்ததையும் நினைவுகூர்ந்தார்.