ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா தீவிர அரசியலில் குதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. தொண்டர்கள் தினமும் வலியுறுத்தி வருகிறார்கள்.
சென்னை தி.நகர். சிவஞானம் தெருவில் உள்ள தீபாவின் வீட்டு முன்பு தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடுகிறார்கள்.
காலையில் இவர்களை தீபாவின் கணவர் மாதவன் சந்தித்து பேசுகிறார். மாலை நேரத்தில் தீபா, தொண்டர்களை சந்திக்கிறார். அப்போது சிறிது நேரம் அவர்களின் முன்னால் பேசுகிறார். தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவரது பேச்சு உள்ளது.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோர் காட்டிய வழியில் புதிய பயணத்தை நாம் விரைவில் தொடங்குவோம் என்று கூறி வந்த தீபா, நேற்று மாலையில் தனது அரசியல் பயணம் எப்போது இருக்கும் என்று வெளிப்படையாக அறிவித்தார்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி அவரது பிறந்த நாளான வருகிற 17-ந்தேதி எனது அரசியல் பயணத்தை தொடங்குகிறேன் என்று தீபா கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் பெயரும், புகழும் ஓங்க வேண்டும். அனைவரும் விரும்பும் வகையில் நமது பயணம் இருக்கும். உங்களுக்காக நான் பணியாற்றுவேன் என்று தொண்டர்களிடம் உறுதி அளித்துள்ளார் தீபா.
தீபாவின் வீட்டு முன்பு நாளுக்கு நாள் தொண்டர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுவரை அரசியல் களத்தை கண்டிராத தீபா, தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களின் ஆதரவுடன் அரசியல் களத்தில் கால் பதிக்கிறார்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அந்த வகையில், தை மாதம் பிறந்த பின்னரே தீபா தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். இதனால் நிச்சயம் எங்களுக்கு நல்ல வழி பிறக்கும் என்று அவரது வீட்டு முன்பு திரளும் தொண்டர்கள் கூறினர்.
17-ந்தேதிக்கு பின்னர் அரசியல் பயணத்தை மேற்கொள்வேன் என்று கூறி இருக்கும் தீபா, அந்த பயணம் எப்படி இருக்கும் என்பது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. எனவே அன்றைய தினம் தனது அரசியல் பயணத்தில் அடுத்த கட்டம் பற்றி முக்கிய அறிவிப்பை தீபா வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவின் வீட்டுக்கு தினமும் வரும் தொண்டர்கள் தங்களது பெயர், முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை அங்குள்ள பதிவேட்டில் எழுதி விட்டு செல்கிறார்கள். தற்போது தொண்டர்களின் கருத்தை அறிய பெட்டி ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. அதில் தொண்டர்கள் தங்களது கருத்துக்களை எழுதி போடுகிறார்கள்.
17-ந்தேதி வரை இது போன்று தொண்டர்களின் கருத்தை அறியும் தீபா அதன் பின்னரே, அரசியல் பயணம் பற்றிய புதிய அறிவிப்பை வெளியிட உள்ளார்.
தமிழகம் முழுவதும் தீபா பேரவை தொடங்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க.வினரே இதனை தொடங்கி வருகிறார்கள்.
திண்டுக்கல், திருச்சியில் நடந்த கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தீபா பேரவை தொடங்குவது உள்பட பல விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கும்பகோணம் பகுதியிலும் தீபா பேரவைக்கு உறுப்பினர்கள் தீவிரமாக நடைபெற்றது.
சேலத்தில் ஜெயலலிதா தீபா பேரவை மாநில மாநாடு விரைவில் நடத்தப்படும் என்று மாநில ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் தீபா பேரவையில் 2 லட்சம் பேர் சேர்ந்துள்ளதாக ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
ராணிப்பேட்டையில் தீபாவின் பேனரை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரியில் அ.தி.மு.க. நிர்வாகிகளில் ஒரு பிரிவினர் கூட்டம் நடத்தினர். அப்போது தீபா அரசியலுக்கு வரக்கோரி வருகிற 13-ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே தீபாவுக்கு இளைய புரட்சித்தலைவி என்கிற பட்டத்தை அவரது ஆதரவாளர்கள் வழங்கியுள்ளனர்.