மைத்திரி ஆட்சியில் சாத்தியப்படாவிட்டால் இனி எந்த ஆட்சியிலும் தீர்வு சாத்தியப்படாது! கிழக்கு முதல்வர் நஷீர் அஹமட் எடுத்துரைப்பு!!

இனப்பிரச்சினைக்கான தீர்வு இந்த ஜனாதிபதியின் (மைத்திரி) ஆட்சிக் காலத்துக்குள் சாத்தியப்படாவிட்டால் இனி எந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலும் சாத்தியப்படாது என கிழக்கு மாகாண முதல மைச்சர் ஹாபிஸ் நஷீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடப் பூர்த்தியை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கிழக்கு மாகாண முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

சிறுபான்மையினரின் அபிலாஷைகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையிலேயே முஸ்லிம், தமிழ் மக்கள் நல்லாட்சியை இந்த நாட்டில் உருவாக்கியுள்ளார்கள்,

அதன் அடிப்படையில் ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேன கிழக்கு மற்றும் வடக்கின் அபிவிருத்தி குறித்து கரிசனை செலுத்தி பல வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவது வரவேற்கத்தக்கது.

சிறுபான்மை மக்கள் இந்த மண்ணில் நிரந்தரமாக, நிம்மதியாக வாழ்வதற்கான தீர்வொன்றையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்குவார் என்ற நம்பிக்கை இன்னும் எமக்கு இருக்கின்றது என்பதை கூறித்தானாக வேண்டும்.

அதுமாத்திரமன்றி அதிகாரப் பகிர்வின் மூலம் மாத்திரமே இனப்பிரச்சினைக்கான தீர்வு முழுமைபெறும் என்பதை மறுக்க முடியாது என்பதுடன் அதிகாரப் பகிர்வை அரசியல் தீர்வினூடாக வழங்கி யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு இன்னும் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வரும் மக்களின் வாழ்வை துரிதமாக கட்டியெழுப்ப ஜனாதிபதி தமது பங்களிப்பை வழங்குவார் என்று நாம் முழுமையாக நம்புகின்றோம்.

அத்துடன் இனவாதம் இந்த நாட்டில் மீண்டும் தலைதூக்கி தலைவிரித்தாட ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் சிறுபான்மை மக்கள் அரசின் மீது அதிருப்தியுறும் சூழல் ஏற்பட்டுள்ளது என்பதுடன் ஜனாதிபதி இதனைக் கருத்திற் கொண்டு இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு இடமளிக்காது சிறுபான்மை மக்களின் பாதுகாப்பையும் அவர்கள் நிம்மதியாக வாழ்வதற்கான சூழலையும் ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

ஆகவே தேசிய நல்லிணக்கத்தை ஏற்ப டுத்தும் நல்லாட்சி அரசாங்கத்தின் எந்தவொரு செயற்பாட்டு க்கும் கிழக்கு மக்கள் இரண்டு கைகளையும் உயர்த்தி ஆதரவு வழங்கத் தயார். ஆனால் சில அமைச்சர்கள் இனவாதிகளுடன் கை கோர்த்து முன்னெடுக்கும் நடவடிக்கைகளே அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து மக்கள் சந்தேகக் கண்கொண்டு நோக்க வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது என்பதை ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியாக வேண்டும்.

ஆகவே அரசின் தலைவர் என்ற வகையில் இனவாதிகளுக்கு உரமூட்டும் அமைச்சர்களுக்கு எதிராக உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியைக் கேட்டுக் கொள்வதுடன் இதன் மூலம் ஜனாதிபதி முன்னெடுக்கும் நல்லாட்சி மேலும் வலுப்பெறும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

கிழக்கில் தலைவிரித்தாடும் வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமை ஆகியவற்றுக்கும் ஜனாதிபதி கால்பதித்திருக்கும் தமது மூன்றாவது ஆட்சிக்காலத்தில் தீர்வு வழங்கப்படும் என நம்புவதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஷீர் அஹமட் மேலும் தெரிவித்தார்.