யாழ்.கொட்டடிப் பகுதியில் உள்ள இறைச்சிக்கடை ஒன்றில் இருந்து மனித பாவனைக்கு உதவாத சுமார் 120 கிலோ உடைய இறைச்சி வகைகள் பொதுச்சுகாதாரப்பரிசோதகர்களால் கண்பிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில்,
யாழ் பண்ணை, கொட்டடி இறைச்சிக்கடைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடை ஒன்றில் மனித பாவனைக்குதவாத (பதன் இழந்த) இறைச்சி வகைகள் களஞ்சியப்படுத்தி வைக்கப்படிருப்பதாக நேற்றைய தினம் யாழ்.பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அத் தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்த பொதுச்சுகாதாரப் பரசோதகர்கள் குறித்த கடையினை சோதனையிட்ட போது அங்குள்ள குளிர்சாதனப்பெட்டியினுள் கோழி,ஆடு, மாடு போன்றவற்றின் இறைச்சி, குடல், எலும்புகள், கால்கள் என்பன களங்சியப்படுத்தப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
அவை மனித பாவனைக்கு பயன்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகத்தில் அவற்றை அப்புறப்படுத்த முனைந்த போது கடை உரிமையாளர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் அவை இறைச்சி கழிவுகள் என்றும் அவை விலங்குகளுக்கு உணவாக கொடுப்பதற்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனால் இருபகுதியினரிடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் பதட்ட நிலை ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அப்பகுதிக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டதையடுத்து கடை உரிமையாளார் குறித்த இறைச்சிவகையை அழிப்பதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார் .
அதனையடுத்து குளிர்சாதனப்பெட்யில் களஞ்சியப்படுத்தப்பட்டடிருந்த இறைச்சிகள், கழிவுகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு காக்கை தீவு பகுதிக்கு கொண்டு சென்று மண்ணெண்ணை ஊற்றி தீவைத்து எரிக்கப்பட்டது.