பிறவா நிலை அருளும் வைகுண்ட ஏகாதசி விரதத்தின் பலன்கள்!

தாயிற் சிறந்ததோர் கோவில் இல்லை; காயத்ரியை விட உயர்ந்த மந்திரம் இல்லை; கங்கையை விட சிறந்த தீர்த்தம் இல்லை; ஏகாதசியை விட சிறந்த விரதம் இல்லை; என புராணங்கள் கூறுகின்றன.

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று பகவத் கீதையில் கண்ணபிரான் கூறி உள்ளார். இதனால் மார்கழி மாதம் பெருமைக்குரிய மாதமாக கருதப்படுகிறது.

ஒவ்வொரு மாதத்திலும் இரு ஏகாதசிகள் (சுக்ல-கிருஷ்ண) வருகின்றன. வருடத்திற்கு 24 ஏகாதசிகள். இதில் தனுர் மாதத்தில் (மார்கழி) வளர் பிறையில் 11-வது நாளன்று வரும் ஏகாதசி தான் வைகுண்ட ஏகாதசி. இதனை பெரிய ஏகாதசி, மோட்ச ஏகாதசி என்றும் அழைப்பர்.

மனிதன் பிறவி என்னும் சுழற்சியில் இருந்து விடுபட்டு பிறவா நிலையை அடைவதையே விரும்புகிறான். அந்த நோக்கத்தை அடைய செய்யக்கூடியது இந்த ஏகாதசி விரதம்.

“வைகுந்தம் புகுவது மன்னவர் விதியே” என்பதற்கேற்ப ஜீவாத்மா, பரமாத்மாவோடு சேர்வது என்பது தான் ஏகாதசி விரதத்தின் உட்பொருள். அந்த உட்பொருளின் வெளிவடிவாக நடைபெறுவது தான் பரமபத வாசல் (சொர்க்கவாசல்) திறப்பும், வைகுண்ட ஏகாதசி திருநாளும்.

வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்படும். சொர்க்கவாசலின் கீழ் விரஜா நதி ஓடுவதாக ஐதீகம். பகவான் சொர்க்க வாசலை கடந்து செல்லும்போது அவரை தொடர்ந்து செல்லும் பக்தர்கள் விரஜா நதியில் நீராடிய பலனை அடைவதாகவும், அதன்மூலம் பாவங்கள் நீங்குவதாகவும் கூறப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருந்து சொர்க்க வாசல் வழியாக சென்று மகா விஷ்ணுவை துதிப்போருக்கு இந்த பிறவியில் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு ஆகியவற்றை பகவான் வழங்குவதோடு மறு பிறவியில் வைகுண்டபேறு (சொர்க்கம்) வழங்குவதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

ஏகாதசி மரணம், துவாதசி தகனம் என்ற சொல் வழக்குக்கேற்ப ஏகாதசி திதியில் ஒருவர் காலமாவதும், அடுத்த திதியாகிய துவாதசியில் உடல் தகனம் செய்வதும் வெகு புண்ணியம் என புராண நூல்கள் கூறுகின்றன. 6 வயது முதல் 60 வயது வரை உள்ளஆண், பெண்கள் அனைவரும் ஏகாதசி விரதத்தை கடைப்பிடிக்கலாம். ஏகாதசியன்று உபவாசமிருந்து மகா விஷ்ணுவை வழிபட்டு துவாதசியன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு ஒருவருக்கு ஆடை தானம், அன்னதானம், தாம்பூலம், தட்சணை வழங்குவது மிகச்சிறந்த பலனை அளிக்கும்.

ராவணனின் இன்னல்களை சகிக்க முடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழி ஏகாதசியன்று நாராயணனை வணங்கி தங்கள் துன்பங்களை கூறினர். சுவாமியும் பிரம்மா மற்றும் தேவர்களுக்கு தரிசனம் அளித்து அவர்களை காத்தருளினார். முக்கோடி தேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசிக்கு முக்கோடி ஏகாதசி என்ற பெயரும் உண்டு.

தேவர்களும், அசுரர்களும் அமுதம் பெறவேண்டி இரவும், பகலும் விரதம் இருந்து பாற்கடலை கடைந்தபோது அமுதம் வெளிப்பட்டது. துவாதசியன்று மகாலட்சுமி சமுத்திரத்தில் இருந்து வெளியே வந்து தேவர்களுக்கு திருக்காட்சி கொடுத்து அவர்களுக்கு அருளாசி புரிந்தாள். அன்று முதல் ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து மகாவிஷ்ணுவை துதிப்போருக்கு அனைத்து நலன்களையும் பகவான் வழங்கி வருகிறார். 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புடையது. அங்கு வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்படும். ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய பத்து நாட்கள் பகல் பத்து என்றும் அடுத்த பத்து நாட்களை இராப்பத்து என்றும் கொண்டாடுகிறார்கள்.

கார்த்திகை மாதத்தில் ஒரு நாள் திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி பாடல்களை பெருமாள் முன் பாடி காட்டினார். இதனால் ஆனந்தம் அடைந்த பெருமாள், திருமங்கை ஆழ்வாரிடம் வேண்டிய வரத்தை கேள் என்றார். அதற்கு அவர் ஏகாதசி விழாவில் வேதங்களைக் கேட்டு மகிழ்வது போல் தமிழ் மொழியில் நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி பாடல்களை கேட்டருள வேண்டும் என்றார். அப்படியே ஆகட்டும் என்று பெருமாளும் வரமளித்தார்.

திருமங்கை ஆழ்வாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவர் பாடிய திருமொழி பாடல்களையும் மற்ற ஆழ்வார்கள் பாடிச் சென்ற பாடல்களையும் பெருமாள் கேட்டருளும் விதமாக வைகுண்ட ஏகாதசி விழாவின் தொடக்கமாக பகல் பத்து உற்சவம் கொண்டாடப்படுகிறது.

பகல் பத்தில் நம்மாழ்வாரின் பாசுரங்களை தவிர திருமங்கையாழ்வாரின் திருமொழிப்பாசுரங்களும் ஓதப்படும். இதனால் பகல்பத்து திருவிழா திருமொழித்திருவிழா என்றும் பெயர் பெற்றது. இராப்பத்து காலங்களில் நம்மாழ்வரின் திருவாய்மொழி பாசுரங்கள் ஓதப்படுவதால் திருவாய்மொழித்திருவிழா என அழைக்கப்படுகிறது. இந்த உற்சவத்திற்கு திரு அத்யயன உற்சவம் என்று பெயர். திருமங்கையாழ்வார், நாதமுனிவர், ராமானுஜர் ஆகியோரால் ஆகமவிதிப்படி நடைபெறும் இந்த திருவிழாவில் 20-ம் நாள் நம்மாழ்வார் மோட்சமடைவதாகவும், பின்னர் பக்தர்கள் வேண்டுகோளின் படி நம்மாழ்வாரை பெருமாள் நமக்கே தந்தருள்வதாகவும் தத்ரூபமாக பாவனை மூலம் நடத்தி காட்டப்படும்.

இந்த திருவிழா நாட்களில் விலை உயர்ந்த திரு ஆபரணங்கள் உள்பட பல்வேறு அலங்காரங்களுடன் தினமும் காலை நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி அரையர்கள் அபிநயத்துடன் பாடும் பாடல்களை கேட்டருள்வார். பகல்பத்து உற்சவத்தின் 10-ம் நாள் காலை நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருள்வார்.

இராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். பெருமாள் வடக்குவாசல் வழியாக எழுந்தருள்வார். அதை தரிசிப்பவர்களுக்கும் அதன் வழியாக வருபவர்களுக்கும் பெருமாள் பிறவி பிணியில் இருந்து விடுவித்து மோட்ச நிலையை தந்தருள்வார் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது.