சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர் ஜெயலலிதா நீண்டகால சிகிச்சைக்குப் பின்னர் மரணம் அடைந்தார். அவர் சிகிச்சை பெற்றபோது யாரையும் நேரடியாக பார்க்கவோ சந்திக்கவோ அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவரது மரணம் அடைந்ததையடுத்து பல்வேறு மாறுபட்ட தகவல்கள் வெளியாகின.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அதனால் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு விட வேண்டும் என்றும் சசிகலா புஷ்பா எம்.பி. உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், அவரது மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த சசிகலா புஷ்பா, ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை வெளியுலகிற்கு கொண்டு வருவதற்கு சி.பி.ஐ. விசாரணைக்கு விட வேண்டும் என்று கேட்டு மனு அளித்திருந்தார்.
இந்நிலையில், சசிகலா புஷ்பாவின் மனுவை தற்போது பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறைக்கு அனுப்பி இருக்கும் உள்துறை அமைச்சகம், இது தொடர்பான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி பரிந்துரைத்துள்ளது. விசாரணை விவரத்தை மனுதாரர் சசிகலா புஷ்பாவிடம் தெரியப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
எனவே, இந்த விசாரணை முடிந்து, சசிகலா புஷ்பாவின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருந்தால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்படலாம் என தெரிகிறது.