தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும்படி பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்படுகிறது. இன்றுகூட முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்து அவசர சட்டத்தை பிரகடனம் செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த விஷயத்தில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறதோ? என்ற தவிப்பில் தமிழர்கள் உள்ளனர். ஆனால், இந்த பிரச்சனையில் இருந்து மீள்வதற்குள் புதிய அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.
அதாவது, மத்திய அரசின் கட்டாய விடுமுறை தினங்கள் பட்டியலில் இருந்து பொங்கல் திருநாளை நீக்கியிருக்கிறது. நாடு முழுவதும் பொங்கல் விடுமுறை கட்டாயமல்ல என்றும், பொங்கல் திருநாளை கொண்டாடுபவர்கள் மட்டும் விடுப்பு எடுத்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், மத்திய அரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்கனவே ஜல்லிக்கட்டு விஷயத்தில் தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.