‘நீட் தேர்வு சவால்களும் பயிற்று மொழி சிக்கல்களும்’ என்ற நூல் வெளியீட் விழா அகரம் அமைப்பு சார்பில் சென்னையில் நடந்தது.
பேராசிரியர் பிரபா கல்வி மணி தொகுத்து எழுதி இருந்த இந்த புத்தகத்தை நீதிபதி சந்துரு வெளியிட்டார். விழாவில் நடிகர் சூர்யா கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-
கல்வி சூழல் எப்படி உள்ளது என்று விரிவாகவும் தெளிவாகவும் அனைவரும் பேசியதற்கு என் நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன்.
36 வருடங்களுக்கு முன்பு சிவகுமார் அறக்கட்டளை என்ற பெயரில் மாநில அளவில் இடம் பிடித்த மாணவர்கள் அனைவருக்கும் மரியாதை செய்யும் விதமாக வீட்டிற்கு அழைத்து காசோலை செலுத்தி மரியாதை செய்து வந்தோம். இந்தச் செயல் சரியானதா என்ற கேள்வி தோன்றியது.
அனைவரையும் சமமாக பார்கிறோமா என்று கேள்வி ஞானவேலிடம் இருந்து வந்தது பின்பு பார்க்கும்போது மாநில அளவில் இடம் பிடித்த மாணவர்களில் 75 சதவீதம் மேல் ஐ.ஏ.ஸ் அதிகாரியோட மகனாகவோ மகளாகவோ இருக்கலாம், ஒரு பொறியாளரின் அல்லது மருத்துவரின் மகனாகவோ மகளாகவோ இருக்கலாம். நகரத்தில் படித்து வந்த மாணவர்களையும் கிராமத்தில் படித்து வந்த மாணவர்களையும் சமமாக பார்க்க வேண்டும் என்றும் இதற்கும் மேல் முதல் தலைமுறை மாணவர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு என்ன பண்ண போகிறோம் என்று தோன்றியது.
அதற்கு இந்த கல்வி சூழல் எப்படியுள்ளது என்று 10 வருடங்களுக்கு முன்பாகத்தான் இன்னும் அழமாக யோசிக்க தொடங்கினோம். அகரம் மூலமாக அரசு பள்ளி மற்றும் அதை சார்ந்த உதவிகள் பெற்றுள்ள 1500 பள்ளி மாணவர்களுக்கு பக்கபலமாக அகரம் அமைய அந்த ஒரு உரையாடல் முக்கியகாரணமாக அமைந்தது .
கடந்த 10 வருடங்களாக கல்வி முறையில் நிறைய கேள்விகள் இருக்கிறது, அதை அலசி ஆராயும் விஷயமாக தான் இந்த புத்தகத்தை நான் பார்க்கிறேன். இதை அகரம் மூலமாக வெளியிட நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம்.
தமிழ் வழி கல்வி பயிலும் மாணவர்கள் படித்து முடித்த பின்பு கல்லூரிகளில் சேரும்போது அவர்கள் படுகின்ற கஷ்டங்களை நாங்கள் கண்கூடாக பார்க்கிறோம். தமிழ்வழி கல்வி பயிலும் மாணவர்கள் ஆங்கிலம் பேசுவதற்கும் நகர்புற வாழ்க்கையை வாழ படும் கஷ்டங்கள் மிகவும் கடினமான ஒன்று.
கால்களை கட்டி போடவில்லை. கட்டிபோட்டு ஓட்டபந்தயம் வைத்து முதலில் வந்தவருக்கு பரிசு கொடுக்கவில்லை . கிட்டதட்ட கால்களை வெட்டி போட்டு முதலில் வந்த மாணவர்களுக்கு பரிசு கொடுத்து வருகின்றோம். இது சரியா, இல்லையா என்பதை அலசி ஆராய்ந்து நிறைய தொகுப்புகளை கல்விமணி இந்த புத்தகத்தில் வைத்துள்ளார்.
ஒரு படத்தை பார்த்து அதற்கு விமர்சனம் கொடுக்கிறோம் . அதை இப்படி பண்ணிருக்கலாம் அப்படி பண்ணிருக்கலாம் என்று படத்தின் இடைவேளை காட்சியை கொஞ்சம் மாற்றியமைத்திருக்கலாம் என்று உரையாடுகின்றோம்.
கிட்டதட்ட 25 லட்சம் மாணவர்கள் தொடக்க கல்வியில் சேருகிறார்கள். பின்பு பள்ளி முடித்து கல்லூரியில் சேர்ந்து படிக்கின்றவர்கள் 1 ½ லட்சம் மாணவர்கள் கூட கிடையாது. நிறைய மாணவர்கள் பின்தள்ளப்படுகிறார்கள்.
இப்போ 2800 இடங்கள் அரசு பள்ளியில் உள்ளது அதில் படிப்பவர்கள் 60 சதவீதம் மாணவர்கள் தான் . இதுதான் நமது தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறை. ஆனால் அவர்கள் மருத்துவ துறையில் நுழைய நிறைய கஷ்டங்களை எதிர் கொள்ள வேண்டியதாக உள்ளது. 2,3 இடங்கள் மட்டுமே ஒரு வருடத்திற்கு அவர்களுக்கு கிடைக்கின்றது.
அத்தனை கோடி மாணவர்களின் எதிர்காலத்தை முடிவு பண்ணுவது கல்வி மட்டுமே. எங்கேயாவது டிசைன் இன் இந்தியா என்ற வாசகத்தை பார்க்கின்றோமா எப்போதாவது மேட் இன் இந்தியா என்ற வாசகத்தை பார்க்கின்றோம். தயவு செய்து இந்த புத்தகத்த்தில் நேரத்தை செலவிடுங்கள்.
இவ்வாறு சூர்யா பேசினார்.
விழாவில் தேவகுமார் வரவேற்றார். பேராசிரியர் பிரபா கல்விமணி, எழுத்தாளர் ரவிக்குமார், டாக்டர் சுரேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.