இலங்கையின் தனியார் பஸ் சேவை தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் எப்போதுமே நல்லபிப்பிராயம் இருந்ததில்லை.
பயணிகளின் நலனை முற்றாக அலட்சியம் செய்தபடியும், வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை உதாசீனம் செய்தவாறுமே தனியார் பஸ்சேவைகள் நடத்தப்படுவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாகவே குற்றம் சுமத்தி வருகின்றனர்.
தனியார் பஸ் சேவைகள் தொடர்பாக கூறப்படுகின்ற குற்றச்சாட்டுகள் கொஞ்சநஞ்சமல்ல. நாட்டில் இடம்பெறுகின்ற மோசமான பஸ் விபத்துகளில் தனியார் பஸ்களே அதிகளவில் சம்பந்தப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது.
தொழில் போட்டி காரணமாக தனியார் பஸ்கள் ஒன்றையொன்று முந்திச் செல்ல முற்படும் போது, அவற்றின் சாரதிகள் வீதியில் நடமாடுகின்ற ஏனைய வாகனங்களையோ அல்லது பயணிகளையோ ஒரு பொருட்டாக மதிப்பது கிடையாது.
தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களில் கூடுதலானவர்கள் சுயநலம் மிக்கவர்கள்; மனித உயிர்களை அற்பமாக நினைப்பவர்கள். உயிர்கள் மீதான கருணையெல்லாம் அவர்களிடம் கிடையாது.
போட்டிபோட்ட வண்ணம் அவர்கள் பஸ்ஸைச் செலுத்த முற்பட்டு விட்டார்களானால், வீதியில் செல்லும் மனித உயிர்கள் மீதான அக்கறை அவர்களிடம் இருப்பதில்லை. பணமீட்டுவது மட்டுமே அவர்களது குறிக்கோள்.
இவ்வாறான சுயநலப்போக்கு காரணமாக வீதி விபத்துகளில் ஏராளமான உயிர்கள் காவு கொள்ளப்பட்டு விட்டன. இன்னமும் உயிர்ப்பலி தொடர்ந்து கொண்டே செல்கின்றது.
தூர இடங்களுக்கான சேவையின் போது அதிகரித்த வேகம் காரணமாக இடம்பெறுகின்ற தனியார் பஸ் விபத்துகள் தொடர்பாக ஊடகங்கள் வாயிலாக நாம் அடிக்கடி அறிந்து வருகின்றோம்.
வீதி விபத்துகள் இவ்வாறிருக்கையில், தனியார் பஸ்களில் பயணம் செய்கின்ற பொதுமக்கள் நாளாந்தம் அனுபவிக்கின்ற துன்பங்கள், அவமதிப்புகள் தொடர்பாக தொடர்ச்சியாக புகார்கள் வந்து கொண்டேயிருக்கின்றன.
தனியார் பஸ்கள் பலவற்றில் டிக்கட்டுகள் வழங்கப்படுவதில்லை. நடத்துனர்களிடமிருந்து மீதிப் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு பயணிகள் படாத பாடுபடவேண்டியிருக்கும்.
இவற்றை பயணிகள் கேட்பதற்கு முற்படும் போது நடத்துனர்கள் அவமரியாதையாகப் பேசுவது வழக்கம்; இல்லையேல் அடிதடியில் ஈடுபடுவதும் உண்டு. நடத்துனர்கள் மீதான அச்சம் காரணமாக மீதிப் பணத்தைக் கேட்காமலேயே விட்டுவிடும் பயணிகளும் உள்ளனர்.
பஸ்ஸினுள் மேலதிகமாகப் பயணிகளை ஏற்றுதல், தரிப்பிடங்களில் நீண்டநேரம் காத்திருந்து பயணிகளின் நேரத்தை வீணடித்தல், பஸ்ஸினுள் பெரும் சத்தத்தில் பாடல்களை ஒலிக்கச் செய்து பயணிகளை இம்சைப்படுத்துதல், மதுபோதையில் பஸ்ஸைச் செலுத்தி அப்பாவி மக்களுக்கு மரணத்தை ஏற்படுத்துதல் என்றெல்லாம் தனியார் பஸ் சேவையாளர்கள் புரிகின்ற அட்டகாசங்கள் ஏராளம்.
உண்மையைக் கூறுவதானால் போக்குவரத்துப் பொலிஸாராலும் தனியார் பஸ்களைக் கட்டுப்படுத்த முடிவதில்லையென்றுதான் கூற வேண்டும்.
தனியார் பஸ்களின் எண்ணிக்கை வீதியில் அதிகரித்து விட்டது. பயணிகள் போக்குவரத்தைப் பொறுத்தவரை தனியார் பஸ்கள் ஏகபோக உரிமையைக் கொண்டுள்ளன.
சமயம் பார்த்து அவ்வப்போது அரசாங்கத்தையும் அவர்கள் மிரட்டுவதுண்டு. பணிப்பகிஷ்கரிப்பு என்ற போர்வையில் வழமை நிலைமையை முடக்கி விடுவார்களென்ற அச்சத்தினால் அரசாங்கமும் ஓரளவு கட்டுப்பட்டுத்தான் போக வேண்டியுள்ளது.
அரசின் இவ்வாறான பலவீனத்தையே தனியார் பஸ் சேவையாளர்கள் தங்களுக்கு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு விட்டனர். சுருங்கக் கூறுவதானால் தனியார் பஸ் சேவையாளர்களைக் கட்டுப்படுத்தும் பிடி அரசாங்கத்தின் கைகளை விட்டுச் சென்றுவிட்டது என்பதே உண்மை.
நாட்டில் முன்னொரு காலத்தில் மிகவும் சிறப்பாக இயங்கிய இலங்கைப் போக்குவரத்துச் சபையை தனியார் பஸ்சேவை ஆக்கிரமிப்பதற்குரிய வழியை ஏற்படுத்திக் கொடுத்ததே கடந்த கால அரசாங்கங்கள்தான்.
தாராள பொருளாதாரக் கொள்கை நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டதையடுத்து அரசாங்கங்கள் எதுவுமே சுயமாக வருமானம் ஈட்டுவதில் கவனம் செலுத்தியதில்லை.
அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தி விட்டு கிடைக்கின்ற இலாபத்தில் அரசை இயக்குவதிலேயே கவனம் செலுத்தப்பட்டது. அரச நிறுவனங்கள் முடங்கிக் கொண்டதே இதனால்தான்.
அதுவும் இல்லாத பட்சத்தில் அரசாங்க நிறுவனங்களை தொழில் வழங்கும் நிறுவனங்களாக அரசியல்வாதிகள் மாற்றிக் கொண்டனர்.
தங்களது ஆதரவாளர்களுக்கு தொழில் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக இ.போ.சவும் மாறிப் போனது. அத்துடன் இ.போ. சவின் உயிர்ச் சுவாசமும் நின்று போனது. இதுவே தனியார் பஸ்களின் ஆதிக்கத்துக்கு வழிவகுத்தது.
இலங்கையில் இப்போது தனியார் பஸ் சேவையானது பலம்மிக்கதொரு நிறுவனமாக வளர்ச்சியடைந்திருக்கிறது.
இ.போ.ச என்பது பெயருக்காக இயங்கிக் கொண்டிருக்கின்றது. நிதி நெருக்கடியிலிருந்து இ.போ.சவை மீட்டெடுத்து அதற்கு உயிரூட்டப் போவதாக கடந்த காலத்தில் எத்தனையோ அரசியல்வாதிகள் உறுதியளித்த போதிலும், எதுவுமே நடைபெறவில்லை.
இ.போ.ச இப்போதும் பலவீனமான நிலையிலேயே இயங்கிக் கொண்டிருக்கின்றது.இவ்வாறான நிலையில் மூவாயிரம் பஸ்களை இறக்குமதி செய்து இ.போ.சவைக் கட்டியெழுப்பப் போவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்திருப்பதையடுத்து, நகரங்களுக்கிடையிலான தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் போர்க்கொடி தூக்கியுள்ளது.
மூவாயிரம் பஸ்களை இறக்குமதி செய்து சேவையில் ஈடுபடுத்துவதற்கு அனுமதிக்கப் போவதில்லையென்றும், அதற்கு எதிராகப் போராடப் போவதாகவும் அச்சங்கம் எச்சரித்துள்ளது.
தனியார்பஸ் சேவையாளர்களின் உரிமையை மீறும் செயலே இதுவென்று கூறியுள்ள அச்சங்கம், இ.போ.சவை முழுமையாக தனியாரிடம் ஒப்படைக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள இ.போ.சவை மேம்படுத்துவதை நிறுத்துமாறு வலியுறுத்தும் அளவுக்கு, தனியார் பஸ்காரர்களின் ஏகபோகம் எல்லை மீறிப் போயிருக்கின்றதென்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம்.
பயணிகளின் நலனுக்காக இ.போ.ச பஸ் சேவையை உயிர்ப்பிப்பதற்கு அரசு முற்படுவதைப் பாராட்டுவது முக்கியம்.
இ.போ.ச சேவை அபிவிருத்தி செய்யப்படுவதால் பயணிகளின் அவலம் பெருமளவு நீங்குமென்பதுவும் உண்மை.
இவ்வாறிருக்கையில், இ.போ.சவை முடக்குவதற்கு தனியார் பஸ் சேவையாளர்கள் முற்படுவதை எவ்வாறு தான் ஏற்றுக் கொள்ள முடியும்!