வடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமாகவே செயற்பட்டு வருகின்றது.
எந்த காலத்திலும் இனவாதம் பேசவில்லை. நாம் இனவாதம் பேசுகின்றோம் என ஹெல உறுமய வழக்கு தொடர்ந்தால் நாம் வழக்கை எதிர்கொள்ள தயாராகவுள்ளோம் என வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபை இனவாதம் பேசுவதை நிறுத்தவேண்டும் இல்லையேல் வழக்குத் தொடருவோம் என ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை விடுத்துள்ளமை தொடர் பில் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாண சபையில் நாம் எந்த காலத்திலும் இனவாதம் பேசவில்லை.
தெற்கில் உள்ள இனவாத ஊடகங்களும் இனவாத அரசியல் வாதிகளுமே மாகாண சபையின் பிரேரணைகளை நிறைவேற்றுவதை முழுமையாக ஆராயாது இனவாத செய்திகள் வந்ததும் அவர்களே இனவாதத்தை பேசுகின்றார்கள்.
தெற்கில் இருந்து உற்பத்தியாகும் கள்ளை வடக்கில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் விற்பனை செய்யவேண்டாம் என்பதே எமது கோரிக்கை.
குறிப்பாக வடக்கில் உள்ள பனை தென்னை கூட்டுறவு சங்கங்கள் தமது சமூகத்தை பாதுகாப்பதற்கு அதற்கேற்ப செயற்படவே உருவாக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக அத்தகைய பணியை செய்யவேண்டிய தேவை உள்ளது. கூட்டுறவாளர்கள் தமது செயற்பாட்டை செய்ய வேண்டும். இதன் மூலமே தமது நோக்கத்தை அடையவேண்டும்.
அதனைவிடுத்து தெற்கில் உள்ள கள்ளை கூட்டுறவு சங்கத்தில் விற்பதன் விளைவு பாதிப்பை ஏற்படுத்துவதால் கூட்டுறவு சங்கத்தில் அனுமதி மறுக்கப்பட்டது.
ஏனைய இடங்களில் விற்பதற்கு தடைசெய்யவில்லை.வடக்கு மாகாண சபைக்கான கீதம் அமைத்தலை பொறுத்தவரை அது அனைத்து மாகாணங்களிலுமுள்ள ஒன்றாகும் எமது சபையில் இல்லாது இருந்தது.
இதனை உருவாக்க முயற்சி எடுத்தால் அது வடக்கிற்கான தேசிய கீதம் என கூற முடியாது.இனவாத ஊடகங்கள் செய்தி வெளியிட்டவுடன் அந்தச் செய்தியை ஆராயாது வடமாகாண சபை தொடர்பில் பேசுவது முட்டாள் தனம்.
ஒரு விடயத்தை பேசவேண்டும் என்றால் அதனை ஆராய்ந்து செயற்படவேண்டும். இதை விடுத்து இனவாதத்தை தாங்களே செயற்படுத்தி விட்டு எம் மீது பழிபோடுவது விசமத்தனம்.
எம்மீது வழக்குப் போடுவது என்றால் போடட்டும். நாம் அதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றார்.