நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளினால் மாத்திரம் ஒன்றிணைந்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியாது என தேசிய நல்லிணக்கம் தொடர்பான பணியகத்தின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ரோயல் கல்லூரியின் புதிய கலையரங்கத்தில் நேற்று தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டதை அடுத்து அதன் கீழ் இடம்பெற்ற நிகழ்வொன்றில் முன்னாள் ஜனாதிபதி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டின் சுதந்திரத்திற்காக தமிழ் தலைவர்களும், முஸ்லிம், பறங்கியர்கள் ஆகிய மக்களின் தலைவர்களும் முன்னின்று செயற்பட்டனர்.
இதேபோன்று அனைவரும் தேசிய ஐக்கியத்திற்காக செயற்பட வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைவருக்கும் ஒரே மாதிரியான நியாயமான உரிமையை அனுபவிக்கும் நடைமுறை இருக்க வேண்டும்.
இன ரீதியில் பிளவுபடாது, இலங்கையர் என்ற சிந்தனையில் செயற்படுவோமாயின், எதிர்கால சமூகத்தினருக்கு பெரும் பயனுள்ளதாக அமையும் என்று சுட்டிக்காட்டினார்.
ஒவ்வொரு வருடமும் நடைமுறைப்படுத்தவுள்ள தேசிய மற்றும் நல்லிணக்க ஒருங்கிணைப்பு வாரத்தின் நோக்கம் பாடசாலை மாணவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை மேம்படுத்தி எதிர்காலத்தில் ஒன்றிணைந்து செயற்படும் கட்டமைப்பு ஏற்படுத்தப்படும்.
சிறப்பான எதிர்காலத்தையும் இதன் மூலம் இவர்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியும்.
இதன் மூலம் நாட்டின் அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்பு செய்பவர்களாக இவர்கள் விளங்குவார்கள் எனவும் சந்திரிக்கா குமாரதுங்க கூறியுள்ளார்.