அன்று தான் கூறிய அரசியலமைப்பினையே பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது கொண்டுவருவதற்கு தயாராகின்றார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தினால் பல்கலைக்கழக மாணவர்களை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ள திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பிரதமருக்கு எனது கட்சி மீண்டும் வெற்றிபெறும் என்ற அச்சத்தினால், தான் கூறிய அரசியலமைப்பினை அன்று வேண்டாம் என கூறினார்.
நான் தொடர்ந்தும் சில காலத்திற்கு ஜனாதிபதியாக இருந்து விடுவேன் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அஞ்சினார். ஆனால் இறுதியில் நானே அவர்களை அதிகாரத்திற்கு வருவதற்கு உதவி புரிந்தேன்.
அதுமட்டுமல்லாமல் தலைமைத்துவத்திற்கும் ஒத்துழைப்பு வழங்கினேன். பிரதமர் பதவியைப் பெற்றுக்கொண்டு மேலும் சிலர் ஜனாதிபதியான பின்னர் அன்று கூறியவற்றை இன்று கூறுகின்றனர்.
எனினும், சுமார் இருபது வருட காலம் நாடு அழிவுப்பாதையை நோக்கி சென்றது. ஆனால் தற்போதுதான் அது தொடர்பில் சிந்திக்கின்றனர்.
இதை விடுத்து அன்றே தமக்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்கலாம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.