2020ம் ஆண்டில் மைத்திரியை ஜனாதிபதி வேட்பாளராக தீர்மானிக்கவில்லை : சந்திரிக்கா

எதிர்வரும் 2020ம் ஆண்டில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடச் செய்வது என்பது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் கூறுகையில்,

எதிர்வரும் 2020ம் ஆண்டில் ஜனாதிபதி வேட்பாளராக யாரை போட்டியிடச் செய்வது என்பது குறித்து சுதந்திரக் கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை. நான் கட்சியின் சிரேஸ்ட ஆலோசகராவேன்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்து செய்வதாகவும், மீளவும் ஜனாதிபதியாக போட்டியிடப் போவதில்லை எனவும் கூறியே மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார்.

அத்துடன், 2020ம் ஆண்டில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என சிலர் கூறுகின்றனர்.

மேலும், கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் என்ற வகையில் இவ்வாறான ஓர் தீர்மானத்தை கட்சி எடுக்கவில்லை என்பதனை நான் அறிவேன் என சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்