அபிவிருத்தி விசேட சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மலிக் சமரவிக்கிரம ஆகியோரே சிறப்பு அமைச்சர்களாவார்கள் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், நாட்டின் அபிவிருத்தியின் அதிகாரத்தை ஒருவரின் கைக்குள் எடுக்கும் நோக்கில் தான் சிறப்பு அமைச்சு உருவாக்கப்படவுள்ளது.
இந்த உண்மையை உணர்ந்ததால் தான் மாகாண சபைகளில் இந்தச் சட்டமூலம் தோற்கடிக்கப்படுகின்றது. அமைச்சர் ராஜித சேனாரத்ன சொல்கிறார் இது முட்டாள் தயாரித்த சட்டமூலம் என்று.
அது தான் உண்மை. இந்தச் சட்டமூலத்தில் என்ன இருக்கின்றது என்று அமைச்சர்களுக்கே தெரியாது. எதுவும் தெரியாமலேயே கையை உயர்த்துகின்றனர்.
அரசியல் அதிகாரங்களைப் பகிர்வது பற்றி பேசிக்கொண்டு அபிவிருத்தி அதிகாரங்களை ஓரிருடத்துக்கு எடுப்பதற்கு முயற்சி செய்யப்படுகின்றது.
அந்த அடிப்படையில் அமையப்போகும் சிறப்பு அமைச்சானது சர்வாதிகாரத் தன்மை கொண்டதாகும். இதைத்தானே கடந்த அரசும் செய்தது. இவ்வாறுதான் பஸில் ராஜபக்சவிடம் முழு அதிகாரமும் வழங்கப்பட்டது.
புதிய அரசமைப்பில் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டு அதிகாரம் நாடாளுமன்றுக்கு வழங்கப்படும் போது அந்த முழு அதிகாரத்தையும் பிரதமராக இருந்து கொண்டுதான் கைப்பற்றலாம் என்று ரணில் நினைக்கின்றார்.
அவ்வாறு அதிகாரம் அவரது கைக்கு வரும்போது அபிவிருத்தி அதிகாரமும் அவருக்கு இலகுவாக வந்துவிடும் என்று ரணில் நினைக்கின்றார்.
அதற்காகவே இப்போது அபிவிருத்தி விசேட ஏற்பாடு சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ரணில் முயற்சி செய்கின்றார்.
இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் பிரதமர் ரணில் மற்றும் மலிக் சமரவிக்கிரம ஆகிய இருவருமே சிறப்பு அமைச்சுப் பதவியைக் கைப்பற்றுவர்.
ஆனால், இந்த திட்டம் வெற்றிபெறாது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் ஒன்றிணைந்தே இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றில் தோற்கடிப்பர் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.