ஒற்றையாட்சி என்ற போர்வைக்குள் மறைந்துகொண்டு பிரிவினை வாதத்தை நோக்கி இந்த அரசு பயணிக்கின்றது. நாட்டைப் பிரித்துக் கொடுப்பதே இந்த அரசின் ஒரே இலக்காகும் என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், இந்த அரசைப் பொறுத்தவரையில் நாட்டின் அபிவிருத்தி என்பது நாட்டின் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பதுதான்.
ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் மாத்திரமன்றி இன்னும் ஏகப்பட்ட சொத்துக்களை இந்த அரசு வெளிநாடுகளுக்கு விற்பதற்கு முடிவு செய்துள்ளது.
இந்த வேலைத்திட்டம் தொடர்ந்தால் இந்த நாட்டின் எதிர்காலச் சந்ததிக்கு எதுவுமே மிஞ்சாது. நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கே இந்த அரசு மக்களிடம் ஆணையைப் பெற்றது.
அத்துடன், இன்று அந்த ஆணையை மறந்து வேறு திசையில் செல்கின்றது. நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை நீக்குவது பற்றி பேச்சே இல்லை.
புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவது தொடர்பிலான 6 உப குழுக்களின் அறிக்கைகளும் இது பற்றி பேசவில்லை.
அதிகாரப் பகிர்வு பற்றியே இந்த அரசு பேசுகின்றது. ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு என்று பேசினாலும் அது சிங்கள மக்களை ஏமாற்றும் ஒரு நடவடிக்கையாகும்.
இந்த அரசின் ஒரே இலக்கு, நாட்டைப் பிரித்துக் கொடுப்பதுதான். அதை நாட்டு மக்கள் எதிர்ப்பார்கள் என்பதற்காக ஒற்றையாட்சி என்ற போர்வையை இந்த அரசு போர்த்தியுள்ளது.
அதற்குள் மறைந்து கொண்டே பிரிவினை வாதத்தை நோக்கி இந்த அரசு செல்கின்றது. மேலும், மறைந்து கொண்டே இந்த நாட்டைத் தமிழருக்குப் பிரித்துக் கொடுக்கப் போகின்றது.
இதற்கு நாம் இடம் கொடுக்கமாட்டோம் என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.