சிகாகோவில் பிரியாவிடை உரையில் அமெரிக்கர்களுக்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்த ஒபாமா!

சிகாகோ: தற்போதைய அமெரிக்க அதிபராக உள்ள பராக் ஒபாமாவின் பதவிக்காலம் ஜனவரி 20ம் தேதியுடன் முடிவடைகிறது.  இதனிடையே, இன்று சிகாக்கோவில் நடைபெற்ற பிரியாவிடை உரையில் ஒபாமா பேசினார். அதில், கடந்த வாரத்தில் எனக்கும்,  மிச்செலுக்கும் அதிகளவில் வாழ்த்துக்கள் வந்தன. அதற்காக மக்களுக்கும், என்னுடைய நலம் விரும்பிகளுக்கு இந்த நேரத்தில் நான்  நன்றி கூற விரும்புகிறேன் என்றார்.

ஒவ்வொரு நாளும் நான் மக்களிடமிருந்து ஏதேனும் ஒன்றை கற்றுக்கொண்டு இருக்கிறேன். அதுவே என்னை அமெரிக்காவின்  சிறந்த அதிபராக்க மாற்றியது என்று கூறிய ஒபாமாவின் கண்களில் வந்த கண்ணீர் அமெரிக்க மக்களை நெகிழச் செய்தது.

தற்போது, உலகின் பலமான நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா உள்ளது. மேலும், வரலாற்றிலேயே அதிக அளவிலான  வேலைவாய்ப்புகளை அமெரிக்கா உருவாக்கி உள்ளது. நமது பொருளாதார வளர்ச்சியும் சிறப்பான முன்னேற்றத்தை  கண்டுள்ளது. எனினும் நாம் வளர இன்னும் நிறைய உயரம் இருக்கின்றன என்றார்.

ஜனநாயகத்தின் மூலமே நாம் வளர்ச்சியை அடைய வேண்டும், அதுவே சாத்தியம் என்று கூறிய ஒபாமா, மக்கள் ஒற்றுமையால்  மட்டுமே மாற்றங்களும், வளர்ச்சிகளும் நிகழும் என்றார். 8 ஆண்டுகளாக அமெரிக்காவின் அதிபராக இருந்துள்ளேன். ஒன்றாகவே  வீழ்வோம் அல்லது ஒன்றாகவே எழுவோம்.

பயங்கரவாதம் ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. இதனை நமது குழந்தைகளுக்கு எடுத்துரைத்து அவர்களை  சிறந்த பண்புள்ளவர்களாக வளர்க்க வேண்டும். மேலும் அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்  என்றும் ஒபாமா கூறினார். அமெரிக்க வளர்ச்சியில் குடியேறியவர்களின் பங்கு முக்கியமானது என்றார். அமெரிக்காவின் புதிய  அதிபராக டொனால்டு டிரம்ப் விரைவில் பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.