ரஜினி நடிப்பில் கடந்த 1995-ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘பாட்ஷா’. இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். நக்மா, விஜயகுமார், ரகுவரன், ஜனகராஜ், தேவன், ஆனந்த்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தேவா இசையமைத்திருந்தார்.
கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு பிறகு இப்படம் தற்போதைய நவீன தொழில்நுட்பமான டிஜிட்டலுக்கு மாற்றம் செய்யப்பட்டு நேற்று வெளியானது. சத்யம் குழுமத்தின் மிகப்பெரிய திரையரங்கில் இப்படம் ‘Red Carpet Show’ என்ற பெயரில் பிரத்யேக காட்சியாக ரசிகர்களுக்கு திரையிடப்பட்டது. டிஜிட்டலில் மாற்றம் செய்யப்பட்டு வெளியான இப்படத்தை காண அரங்கம் முழுவதும் ரசிகர்கள் குழுமியிருந்தனர்.
படத்தின் ஆரம்பத்தில் ரஜினியின் பெயர் வருவதில் இருந்து கடைசி வரை ரசிகர்கள் அனைவரும் விசில் சத்தத்தை பறக்க விட்டுக்கொண்டே இருந்தனர். 22 வருடங்களுக்கு பிறகும் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பது போன்ற உணர்வுதான் திரையரங்கில் படம் பார்ப்பவர்களுக்கு இருந்தது. டிஜிட்டல் தொழில்நுட்பம் படத்திற்கு இன்னும் பிரம்மாண்டம் கூட்டியிருந்தது.
ரஜினி ஆடி-பாடும் பாடல்களில் எல்லாம் ரசிகர்கள் தங்களையும் மறந்து திரையின் அருகில் சென்று ஆட்டம் ஆடி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். 22 ஆண்டுகளை கடந்தும் இன்னும் ரசிகர்களை இந்த படம் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது என்றால், அது சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற பெரிய கலைஞனால் மட்டுமே சாத்தியம் என்பது மட்டும் உண்மை.