விஜய் நடித்துள்ள ‘பைரவா’ படத்தின் தலைப்புக்கு தடைவிதிக்க சிவில் கோர்ட்டு மறுப்பு!

சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்தவர் ஜி.பொருள்தாஸ். இவர், சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழ் திரைப்படத்துறையில் 15 ஆண்டுகளுக்கு மேலாக இணை இயக்குனராக பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளேன். நான் நாய் ஒன்றின் வீரச்செயல் மற்றும் சாதனையை அடிப்படையாக கொண்ட ஒரு கதையை எழுதினேன். இந்த கதையை ‘3 டி அனிமேஷன்’ முறையில் திரைப்படமாக தயாரிக்க முடிவு செய்து, ஆரம்பக்கட்ட பணிகளை எல்லாம் செய்துள்ளேன்.

இந்த கதைக்கு ‘பைரவா’ என்ற தலைப்பும் வைத்தேன். தென்னிந்திய திரைப்படம் மற்றும் டி.வி. தொடர் தயாரிப்பாளர் கில்டு என்ற அமைப்பில் உறுப்பினராக நான் இருப்பதால், அந்த அமைப்பிடம் ‘பைரவா’ தலைப்பை கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 29-ந் தேதி பதிவு செய்தேன். இந்த பதிவை அவ்வப்போது பணம் கட்டி புதுப்பிக்கவும் செய்துள்ளேன்.

இந்த நிலையில், நடிகர் விஜய், கீர்த்திசுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படத்துக்கு ‘பைரவா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தை விஜயா புரொடக்‌ஷன் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் குறித்து கடந்த டிசம்பர் மாதம் வெளியான விளம்பரத்தை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

உடனடியாக பைரவா என்ற தலைப்பை பதிவு செய்துள்ள விவரங்களை எடுத்துக்கூறி, அந்த தலைப்பை மாற்றிக் கொள்ளும்படி விஜயா புரொடக்‌ஷன் நிறுவனத்தின் உரிமையாளர் ரவிசந்திரனுக்கு கடந்த 2-ந் தேதி நோட்டீசு அனுப்பினேன். என்னுடைய குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து அவர் கடந்த 4-ந் தேதி பதில் நோட்டீசு அனுப்பியுள்ளார். எனவே, ‘பைரவா’ என்ற தலைப்பை பயன்படுத்த தயாரிப்பாளர் ரவிசந்திரனுக்கு தடைவிதிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ‘மனுதாரர் கடைசி நேரத்தில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். எதிர்மனுதாரர் தரப்பின் கருத்தை கேட்காமல், இடைக்கால தடை எதுவும் விதிக்க முடியாது. அதனால், இந்த வழக்கு விசாரணையை 12-ந் தேதிக்கு (நாளை) தள்ளிவைக்கிறேன். அன்று தயாரிப்பாளர் ரவிசந்திரன் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.