நவக்கிரகங்களில் ஒருவரான கேது, புகை நிற மேனியைக் கொண்டவர். இவருக்கு காலன், தூம கேது, லோக கேது, மாச கேது, சர்வ கேது, ரவுத்திரன் போன்ற பெயர்களும் உள்ளன. இவர் வாயு திசைக்கு உரியவரான கேது, ஆணுமற்ற, பெண்ணுமற்ற அலிக்கிரகமாகும். அசுரர்களில் பெரியவர் கேது. இவருக்கு ராசியில் தனி வீடு கிடையாது. எந்த இடத்தில் இருக்கிறாரோ, அதற்கான பலனைக் கிரகித்து அளிக்கும் வல்லமை கொண்டவர். ராகுவைப் போலவே, கேதுவுக்கும் சூரியனும், சந்திரனும் பகைக் கிரகங்கள்.
பஞ்ச பூதங்களில் இவர் நீர். இவரது உச்ச வீடு விருச்சிக ராசியாகும். நீச வீடு ரிஷபம். புதன், சுக்ரன், சனி போன்றவை நட்புக் கிரகங்கள். ஆலயத்தில் நவக்கிரக சன்னிதியில் வழிபடும் பொழுது, கேது கிரகத்திற்கு என உள்ள காயத்ரி மந்திரத்தை சொல்லி வழிபடுவது சிறப்புக்குரியதாகும். கேதுவுக்கான காயத்ரி மந்திரத்தை, தினந்தோறும் 108 முறை சொல்வது சாலச்சிறந்தது.
கேது காயத்ரி மந்திரம் :
‘ஓம் அஸ்வத்வஜயா வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னக் கேதுஹ் ப்ரசோதயாத்’
குதிரைக் கொடியை வைத்திருக்கும் கேதுவை அறிந்து கொள்வோம். சூலம் ஏந்திய கரத்தை கொண்ட அவன் மீது தியானம் செய்வோம். கேது பகவானாகிய அவன், நம்மை காத்து அருள்புரிவான் என்பது இதன் பொருள்.
இந்த காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வருபவர்களுக்கு, வேத, வேதாந்த அறிவு உண்டாகும். பிரச்சினைகள் விலகும். விஞ்ஞான, மெய்ஞான அறிவைப் பெறலாம். வியாதிகள் நீங்கும். பகையை வெல்வீர்கள். பாவங்களில் இருந்து விமோசனம் கிடைக்கும். நட்பு வளரும்.