துன்பங்களை நீக்கும் நிர்ஜலா ஏகாதசி!

ஆனி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி நிர்ஜலா ஏகாதசி. பாண்டவர்களில் மூத்தவரான தர்மபுத்திரர் ஒரு முறை வியாசரை தரிசித்தபோது அவரை வணங்கி “குருதேவா, துன்பங்கள் பலப்பல. அவை எப்போது எப்படி மனிதர்களை பாதிக்கும் என்பது யாருக்கும் தெரியாது. கலியுகத்திலோ, கேட்கவே வேண்டாம். அடை மழை போல, நேரம் காலம் பாராமல் அனைவரையும் படுத்தும். இந்த துன்பங்கள் நீங்கும்படியான ஒரு சுலபமான வழியைச் சொல்லுங்கள்” என வேண்டினார்.

“தர்மபுத்திரா, எல்லாத் துன்பங்களையும் நீக்கக் கூடியது ஏகாதசி விரதம் மட்டுமே. ஏகாதசியன்று, உபவாசம் இருந்து பெருமானை பூஜிப்பதைத் தவிர சுலபமான வழி வேறெதுவும் இல்லை. சகல விதமான சாஸ்திரங்களும் இதைத் தான் சொல்கின்றன” என்று பதில் சொன்னார் வியாசர்.

அருகில் இருந்து இதைக் கேட்ட பீமன், “உத்தமரான முனிவரே, என்னுடன் பிறந்தவர்கள் எல்லாம் ஏகாதசி விரதம் இருக்கிறார்கள். என் தாயும் மனைவியும்கூட ஏகாதசி விரதம் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் என்னையும் ஏகாதசி விரதம் இருக்க சொல்கிறார்கள் என்னால் செய்ய கூடியதா அது?

ஒரு வேளை சாப்பிட்டுவிட்டு, அடுத்த வேளை சாப்பிடாமல் இருப்பதே என்னால் முடியாது. என்னைப் போய் முறையாக உபவாசம் இருந்து ஏகாதசி விரதம் இரு என்றால் நடக்கக் கூடியதா இது. விருகம் என்னும் ஒரு தீ என் வயிற்றில் இருக்கிறது. (பீமனின் வயிற்றில் அதிகமான பசியைத் தூண்டும் இந்தத் தீ இருந்ததால் தான் அவன் விருகோதரன் என அழைக்கப்பட்டான்).

ஏராளமான உணவைப் போட்டால் ஒழிய, என் வயிற்றில் இருக்கும் நெருப்பு அடங்காது. வருடத்துக்கு ஒரே ஒரு நாள் என்னால் உபவாசம் இருக்க முடியும். எனவே எனக்குத் தகுந்தாற்போல நான் எல்லா விதமான ஏகாதசிகளின் பலனையும் பெரும் விதம் ஓர் ஏகாதசியை எனக்குச் சொல்லுங்கள்” என வேண்டினான்.
“கவலைப்படாதே பீமா. உனக்காகவே அமைந்ததைப் போல ஒரு ஏகாதசி இருக்கிறது.

ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி அன்று, தண்ணீர்கூட அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும். அதனாலேயே அது நிர்ஜலா ஏகாதசி எனப்படுகிறது. அந்த ஏகாதசி விரதத்தை நீ கடைப்பிடி” என வழிகாட்டினார் வியாசர். வியாசரை வணங்கிய பீமன் நிர்ஜல ஏகாதசி அன்று தண்ணீர் கூடக் குடிக்காமல் விரதம் இருந்தான். மறுநாள் துவாதசி அன்று உணவு உண்டான்.

அன்று முதல் அந்த துவாதசி “பாண்டவ துவாதசி” என்றும், பீமன் விரதம் இருந்த அந்த ஏகாதசி “பீம ஏகாதசி” என்றும் அழைக்கப்படலாயிற்று. துன்பங்கள் அனைத்தையும் போக்கும் ஏகாதசி இது.