இந்திய அணியின் பயிற்சியாளர் நியமனம் தொடர்பாக முன்னாள் வீரர்கள் கங்குலி, ரவிசாஸ்திரி இடையே மோதல் உருவானது.
பயிற்சியாளர் பதவிக்கு கும்ப்ளே, ரவிசாஸ்திரி உள்பட பலர் விண்ணப்பித்து இருந்தனர். கங்குலி தலைமையிலான குழு கும்ப்ளேயை பயிற்சியாளராக தேர்வு செய்தது. இந்த விஷயத்தில் கும்ப்ளேவுக்கு ஆதரவாக கங்குலி நடந்து கொண்டதாக கூறப்பட்டது.
இதுதொடர்பாக ரவிசாஸ்திரி- கங்குலி வார்த்தைகளால் மோதிக்கொண்டனர்.
இதற்கிடையே இந்திய சிறந்த கேப்டன்கள் பட்டியலை ரவிசாஸ்திரி சமீபத்தில் வெளியிட்டார். இதில் கங்குலியின் பெயர் இடம் பெறவில்லை. அவர் டோனி, கபில்தேவ், பட்டோடி, அஜித்வடேகர் ஆகியோரை குறிப்பிட்டு இருந்தார்.
இந்திய சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்த கங்குலியை ரவிசாஸ்திரி தவிர்த்து இருந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் கங்குலியை புறக்கணித்து இருந்தது தொடர்பாக ரவிசாஸ்திரிக்கு மற்றொரு முன்னாள் கேப்டன் அசாருதீன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
சிறந்த இந்திய கேப்டன்கள் பட்டியலில் இருந்து கங்குலியை புறக்கணித்தது முட்டாள் தனமானது. ரவிசாஸ்திரியால் புள்ளி விவரங்களை பார்க்க முடியாதா? இந்தியாவின் சிறந்த கேப்டன்கள் பட்டியலில் அவர் ஒரு சார்பாக நடந்து கொண்டது கண்டனத்துக்குரியது. இந்திய கிரிக்கெட்டுக்காக பாடுபட்டவர்களை அவர் அவமரியாதை செய்யக் கூடாது.
இவ்வாறு அசாருதீன் கூறியுள்ளார்.
உலக கோப்பை போட்டியில் கேப்டனாக பணியாற்றிய அசாருதீன் சூதாட்ட விவகாரத்தில் ஆயுள்கால தடை பெற்றார். ஆந்திர ஐகோர்ட்டு அவர் மீதான தடையை நீக்கியது. ஆனாலும் கிரிக்கெட் வாரியம் அவர் மீதான தடையை அதிகாரபூர்வமாக நீக்கவில்லை.
இந்த நிலையில் அசாருதீன் ஐதராபாத் கிரிக்கெட் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இது தொடர்பாக அவர் வேட்பு மனுவும் தாக்கல் செய்து இருக்கிறார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அசாருதீனால் ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட முடியுமா? என்ற விவாதம் எழுந்தது.
இது குறித்து அவர் கூறும் போது ‘என் மீது ஆயுள் கால தடையை ஆந்திர ஐகோர்ட்டு நீக்கியது. அப்பீல் செய்ய 2 வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால் கிரிக்கெட் வாரியம் மேல் முறையீடு செய்யவில்லை. எனக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. நான் இந்த தேர்தலில் போட்டியிடலாம் என்றும் எனக்கு சொல்லப்படுகிறது. என்னால் போட்டியிட முடியாது என்பது மற்றவர்கள் பரப்பும் வதந்திகள்’ என்றார்.