அரசைக் கவிழ்த்து மகிந்த தலைமையில் ஆட்சி அமைப்போம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை 2020ம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவதானது நாட்டின் ஆட்சியை மீண்டும் ஒரு முறை ஐக்கிய தேசியக் கட்சியிடம் கொடுப்பதாகும் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இதுதான் நடந்தது எனவும் கீழ் மட்டத்தில் இருக்கும் கட்சியினரை இதுவரை வென்றெடுக்காத ஜனாதிபதி சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தினால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக மோதும் திறனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இழக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று வருடங்களுக்கு பின்னர் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்க இன்னும் காலம் இருக்கின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

மினுவாங்கொடையில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

2017ம் ஆண்டு முக்கியமான ஆண்டாகும். நாட்டு வளங்களை விற்று, பட்டப்பகலில் கொள்ளையிடும் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வருடம் இந்த வருடமாகும்.

இந்த ஆண்டு அரசாங்கத்தை கவிழ்க்கப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச புது வருடம் ஆரம்பிக்கும் போது கூறியிருந்தார்.

மகிந்த ராஜபக்ச என்பவர், 17 வருட ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை அகற்ற பாத யாத்திரை,ஜனகோஷா, மனித சங்கிலி போன்ற போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய தலைவர்.

தற்போதைய அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து அகற்றும் பலமிக்க ஒரே தலைவர் மகிந்த ராஜபக்ச என்பது அனைவரும் அறிந்ததே.

மைத்திரி – ரணில் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தை எதிர்வரும் 27ம் திகதி நுகேகொடையில் மகிந்த ராஜபக்ச தலைமையில் ஆரம்பிப்போம்.

அரசாங்கத்தை கவிழ்ப்பது மாத்திரமல்ல மகிந்த ராஜபக்ச தலைமையில் மக்களுக்கு சார்பான அரசாங்கத்தை அமைப்போம்.

எப்படி அரசாங்கத்தை கவிழ்ப்பது என பலரும் கேட்கின்றனர். அதனை நாங்கள் சரியான நேரத்தில் செய்து காட்டுவோம்.

மகிந்த ராஜபக்ச கூறுவது போல் பின்னால் இருந்து கத்தியால் குத்த நாங்கள் தயாரில்லை.

மக்களுடன் இணைந்து வீதியில் இறங்கி ஜனநாயக பயணத்தின் மூலம் இந்த அரசாங்கத்தை கவிழ்ப்போம் எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.