இனத்தை அடக்கியாள முற்படுவதை த.தே.கூ ஏற்றுக்கொள்ளாது!

தமிழ்ச் சமூகம் கடந்த காலத்தில் அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட சமூகம். இச்சமூகம் தமக்கான தீர்வைப் பெற்றுக்கொண்டு இன்னுமொரு இனத்தை அடக்கியாள முற்படுவதை தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதியாகக் கருதப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாது என அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில்; வாழும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான பங்களிப்புத் தொடர்பாக இன்று கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது,’

தமிழ், முஸ்லிம் இனங்கள் தமிழ் பேசும் மக்கள் என்ற போர்வையில் இணையும்போதே, பெரும்பான்மை இனத்திடமிருந்து பெறும் தீர்வு நிரந்தரமானதாக அமையும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.

இதன் காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் புரிந்துணர்வுப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளது’ என்றார்.

‘வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மொழி வாரியான பிரதேசமாக இருக்க வேண்டும் என்பது எமது அசையாத நம்பிக்கையாகும். இதனால், இந்த இரு சமூகங்களுக்கு இடையிலும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வை ஏற்படுத்துவது சமூகவாதிகளின் தலையாய கடமை என்று நினைக்கின்றேன்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ், முஸ்லிம், சிங்களம் உட்பட அனைத்து இனத்தவர்களும் சமத்துவத்துடன் வாழ நினைப்பது மிகப் பொருத்தமானதே. இதனால், பேச்சுவார்த்தை மூலமாகப் புரிந்துணர்வை ஏற்படுத்தி விடயங்களை முன்னகர்த்துவது நிரந்தர சுபீட்சத்துக்கு வழிவகுக்கும்.

கூச்சலிடும், கொக்கரிக்கும் இனவாத அரசியல் போக்கைக் கைவிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியான, நியாயமான, நிரந்தரமான தீர்வை வழங்குவதற்கான பாதையில் நல்லாட்சி அரசாங்கம் பயணிக்கும் என்ற நம்பிக்கை இன்னும் எமக்கு அற்றுப் போகவில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் இரண்டு பிரதான கட்சிகளும் நியாயமான சிந்தையுடன் செயற்படும் பட்சத்தில் நாடு முன்னேற்றம் அடையும்’ எனவும் அவர் கூறினார்.