அடுத்த ஜனாதிபதி யார்?? பின்வாங்கும் மகிந்த, கோத்தா, மைத்திரி : சூடு பிடித்துள்ள அரசியல்..!

சமகால அரசியலில் இப்போதைக்கு குழப்பமாக மாறிப்போயுள்ள விடயம் ஆட்சி நிலைக்குமா? கவிழ்க்கப்படுமா? என்பதோடு அடுத்த ஜனாதிபதி யார் என்பதே.

காரணம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த விடுத்துள்ள ஆட்சிக் கவிழ்ப்பு சபதமே. இன்னும் 3 வருடங்கள் நல்லாட்சிக்கு இருக்கும் போது கூட அவர் இப்படியான தொரு சபதத்தை அதிலும் இவ்வருடத்திலேயே ஆட்சியை கவிழ்த்து விடுவேன் என்று பகிரங்கமாக கூறியுள்ளார்.

இந்த சபதத்தோடு அடுத்த ஜனாதிபதி பதவிக்காக போட்டிகளிலும் மூத்த தலைவர்கள் அனைவருமே பின்வாங்கிக் கொண்டு வருகின்றார்கள் எனவும் கூறப்படுகின்றது.

அதேபோல முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இருந்தபோதும் அண்மையில் மீண்டும் அவர் பிரதமர் வேட்பாளராக தான் நிற்கப்போவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கோத்தபாய ஜப்பான் சென்றிருந்த காலப்பகுதியாக இருக்கட்டும் அதற்கு முன்னைய காலப்பகுதியாக இருக்கட்டும் அனைவராலும் அடுத்த ஜனாதிபதி என வர்ணிக்கப்பட்டவர் கோத்தபாய ராஜபக்சவே.

என்றாலும் அவர் இப்போது பின்வாங்கும் வகையில் கருத்து வெளியிட்டு வருகின்றமைக்கான காரணம் எது வென தெரியவில்லை.

அதேசமயம் மகிந்த ராஜபக்சவும் மைத்திரியுடன் இணைந்து பிரதமராக செயற்படமுடியும் என்ற வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதன் படி மீண்டும் ஜனாதிபதியாகும் எண்ணம் அவருக்கு இல்லை என்பது தெளிவாகின்றது.

இங்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறிய கோத்தபாய இப்போது பிரதமராக போட்டியிடப்போவதாக கருத்து தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் மகிந்த மற்றும் கோத்தபாய இருவருக்கும் இடையிலேயே பிரதமர் வேட்பாளர் போட்டி நிலவி வருகின்றதா என்ற வகையிலும் கேள்வி உண்டு.

இதேவேளை 2020இல் நடக்கப்போகும் தேர்தல் பற்றியே இப்போது அதிக விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றது. மைத்திரி கூட அமைதி காத்துக் கொண்டே வருகின்றார்.

குறிப்பாக மைத்திரி மகிந்த தரப்பை வெளிப்படையாக எதிர்க்க வில்லை, மகிந்த தரப்பின் குற்றச்சாட்டுகள் பிரதமரை மட்டுமே சுற்றி வருகின்றது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரும் கூட மைத்திரியை அடுத்த சுதந்திரக் கட்சி வேட்பாளராக நிற்க வைப்பதற்கு ஆயத்தம் இல்லை என்று தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

மைத்திரியும் ஒரு தடவையே ஜனாதிபதியாக இருப்பேன் என்ற வகையிலும் முன்னர் கருத்து வெளியிட்டிருந்ததாக கூறப்பட்டது.

முக்கியமாக மைத்திரி ரணில் இணைந்து இருந்தாலும் சுதந்திரக்கட்சி தனித்தே செயற்பட்டு வருகின்றதை அண்மைக்காலமாக அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

இதன் காரணமாக மகிந்த மற்றும் ஜனாதிபதி கூட்டுச் செயற்பாடு மறைமுகமாக நடைபெற்று கொண்டு வருகின்றதா என்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அப்படியாயின் அடுத்த ஜனாதிபதி யார்? கோத்தா, மகிந்த , மைத்திரி அனைவருமே பின்வாங்குகின்றார்களா என்ற சந்தேகம் எழுகின்றமையில் சாத்தியப்பாடு இருக்கத்தான் செய்கின்றது.

இப்போதைய நிலையில் ஆட்சி கவிழ்ப்பை நடத்தியே தீருவேன் என்ற சபதத்தோடு வேகமாக மகிந்த முன்னேறி வருகின்றார்.

இப்போதைய நல்லாட்சி மீது நம்பிக்கையற்ற தன்மையை மக்கள் மத்தியில் பரப்பி அத்தோடு பௌத்தத்தையும் இணைத்து ஆட்சியை கவிழ்க்கும் செயற்பாடுகளையே மகிந்த செயற்பட்டு வருகின்றார் எனவும் கூறப்படுகின்றது.

அப்படி என்றால் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யாராக இருக்கக் கூடும் என்ற வகையில் எழும் புதுக் கேள்விக்கு பதில் ராஜபக்சர்கள் மூலமாகவே கிடைக்கின்றது.

அதாவது இளைஞர் சக்தி ஒன்றே இப்போது நாட்டுக்கு தேவைப்படுகின்றது என்பதே மகிந்தவின் கருத்து அத்தோடு மகிந்த ஆதரவாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தெரிவிப்பதும் இதனையே.

அத்தோடு கோத்தபாயவும் இளைஞர் நாட்டில் புது உத்வேகம் கொண்டு எழவேண்டும் என்ற வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதேபோன்று ஆட்சிக்கு எதிரானவர்கள் அனைவரும் தெரிவிப்பது இதே வகை கருத்தையே. அதன் படி இப்போது இலங்கையில் அதிக செல்வாக்கும், தென்னிலங்கை தரப்பில் கேள்வியும் உள்ள ஒரு இளம் அரசியல் வாதியே நாமல் ராஜபக்ச.

அனைத்து மூத்த தலைவர்களும் பின்வாங்கிக்கொண்டு நாமலுக்கு வழிசமைத்துக் கொண்டு வருகின்றார்கள் எனவும் அதற்கான செயற்பாடுகளையே மகிந்த தரப்பு தற்போது மேற்கொண்டு வருவதாகவும் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறாக அடுத்த ஜனாதிபதிக்கு போட்டியிட புது முகம் அறிமுகப்படுத்தப்படுவதோடு, ராஜபக்சர்கள் இடையேயும் அடுத்த பிரதமருக்கான போட்டியும் நிலவுகின்றது.

இவற்றுக்கு இடையே அரசியல் கைதுகளும் அடுத்தடுத்து தொடர மக்கள் மத்தியிலும் எதிர்ப்புகள் உருவாக்கப்பட்டு அரசியல் சதுரங்க ஆட்டம் கூடு பிடித்துள்ளதை சம கால அரசியலில் காண முடிகின்றதாய் உள்ளது.