தாக்குதல் நடத்திய குண்டர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை! மஹிந்த குற்றச்சாட்டு!!

ஹம்பாந்தோட்டையில் தாக்குதல் நடத்திய குண்டர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிங்களப் பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

அண்மையில் ஹம்பாந்தோட்டையில் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்திய குண்டர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.

இந்தக் குண்டர்களில் பெரும்பான்மையானவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நெருக்கமானவர்கள். இவர்கள் கொழும்பிலிருந்து வந்தவர்களாவர்.

ஹம்பாந்தோட்டை சம்பவம் இடம்பெற்ற போது தனியார் வகுப்புச் சென்று மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் நீதியான முறையில் விசாரணைகளை நடத்த வேண்டும் என மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை சம்பவத்தின் போது கைது செய்பய்பட்டவர்கள் இந்த கட்சியை சேர்ந்தவர்கள் என வகையீடு செய்யப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் யார் என அடையாளப்படுத்தி முறைப்பாடு செய்யுமாறு அவர் கோரியுள்ளார்.